புதுடெல்லி: கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய விசாரணை அமைப்புகளான சிபிஐ, என்ஐஏ, அமலாக்கத் துறை மற்றும் வருமானவரி துறைக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு முன்பாக போராட்டம் நடத்தினர்.
அப்போது, பாஜக தலைமையிலான மத்திய அரசின் உத்தரவின்பேரில் மத்திய புலனாய்வு அமைப்புகள் எதிர்க்கட்சிகளை குறிவைப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். 144 தடை உத்தரவு அமலில் இருந்த நிலையில் அதனை மீறி தேர்தல் ஆணைய அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் மீது டெல்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு நேற்று டெல்லி நீதிமன்ற கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நேஹா மிட்டல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கிலிருந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் டெரிக் ஓ பிரையன் உட்பட 10 பேரை விடுவிப்பதாக நீதிபதி அறிவித்தார்.