பாட்னா: வாக்களிக்க தேவையான 11 ஆவணங்களில் ஒன்றையும் வாக்காளர்களால் வழங்க முடியாவிட்டால், உள்ளூர் விசாரணை அல்லது பிற ஆவணங்களின் அடிப்படையில் தேர்தல் பதிவு அதிகாரி சரிபார்த்து முடிவெடுக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இன்னும் சில மாதங்களில் பிஹார் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) கொண்டுவந்துள்ளது. இதன்படி 2003ம் ஆண்டுக்குப் பின்னர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள், தாங்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட், கல்விச் சான்றிதழ், அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை அல்லது ஆணைகள், நிரந்தர குடியிருப்புச் சான்றிதழ், வன உரிமைச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட குடும்பப் பதிவேடு மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலம் அல்லது வீட்டு ஒதுக்கீட்டுச் சான்றிதழ், 1967 க்கு முன்பு பல்வேறு பொது அதிகாரிகளால் வழங்கப்பட்ட பிற ஆவணங்கள் ஆகிய 11 ஆவணங்கள் சரிபார்ப்புக்கு ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவை இடம்பெறவில்லை.
எனவே இந்த திருத்தம் எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதன்மூலமாக கோடிக்கணக்கான வாக்காளர்கள் விடுபடும் அபாயம் இருப்பதாகவும், இந்த நடவடிக்கை பாஜக வெற்றி பெறுவதை உறுதி செய்வதற்கான சதி என்றும் இண்டியா கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டின. எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து, வாக்காளர்கள் கட்டாய ஆவணங்களை சமர்ப்பிக்காமலேயே உள்ளூர் அளவில் விசாரணை அடிப்படையில் சரிபார்க்கப்படலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிஹார் செய்தித்தாள்களில் இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முதல்பக்க விளம்பரத்தில், “நீங்கள் (வாக்காளர்கள்) தேவையான ஆவணங்களை வழங்கினால், வாக்காளர் பதிவு அதிகாரியின் சரிபார்ப்பு பணிகள் எளிதாக இருக்கும். ஒருவேளை தேவையான ஆவணங்களை நீங்கள் வழங்க முடியாவிட்டால், உள்ளூர் விசாரணை அல்லது பிற ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்.
வாக்காளர்கள் பூத் அலுவலரிடமிருந்து சரிபார்ப்பு விண்ணப்ப படிவங்களைப் பெற்றவுடன், அதை உடனடியாக நிரப்பி, தேவையான ஆவணங்கள் மற்றும் புகைப்படத்துடன் அவரிடம் வழங்க வேண்டும். இதன் அடிப்படையில் தேர்தல் பதிவு அதிகாரி முடிவெடுப்பார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.