கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டப் பேரவைத் தேர்தல் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ளது. மேற்கு வங்கத்தில் பிரபலமான விளையாட்டாக கால்பந்து உள்ளது. இதைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்துக்காக கால்பந்து போட்டிகளை பாஜகவும், திரிணமூல் கட்சியும் நடத்துகின்றன.
சுவாமி விவேகானந்தா கோப்பை என்ற பெயரில் திரிணமூல் காங்கிரஸும், நரேந்திரா கோப்பை என்ற பெயரில் பாஜகவும் போட்டி நடத்துகின்றன. ஹவுராவில் நரேந்திரா கோப்பை கால்பந்து போட்டியை நேற்று மேற்கு வங்க பாஜக மாநில தலைவர் ஷமிக் பட்டாச்சார்யா தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் கூறும்போது, “இன்று சுவாமி விவேகானந்தர், சிகாகோவில் உரையாற்றிய நாளாகும். சர்வதேச அளவில் இந்தியாவை பிரபலப்படுத்தியவர் சுவாமி விவேகானந்தர். அவருக்கு மரியாதை செய்யவே இந்த போட்டி” என்றார். மொத்தம் 43 கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் 1,300 கால்பந்து அணிகள் பங்கேற்கின்றன.