ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் பஷமைலாரம் பகுதியில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் நேற்று நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. எனினும், இதுவரை 4 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள பஷமைலாரம் பகுதியில் சிகாச்சி ரசாயன தொழிற்சாலை கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு மைக்ரோ கிறிஸ்டலைஸ் செல்லுலாஸ் எனும் ரசாயன பவுடர் தயாரிக்கப்பட்டு வருகிறது. 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த தொழிற்சாலையில் நேற்று காலை 143 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, ஆலையில் இருந்த ரியாக்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு தூக்கி எறியப்பட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 32 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.
சிகாச்சி தொழிற்சாலையின் துணை தலைவரான எல்.எஸ்.கோஹன் நேற்று காலையில் தனது காரில் ஆலை வளாகத்துக்குள் வந்த நேரத்தில்தான் ரியாக்டர் வெடித்தது. இதில் அவரது காரும் தூக்கி எறியப்பட்டது. இதில் படுகாயம் அடைந்த கோஹன், மருத்துவமனையில் தீவிரசிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர்களில் ஜெகன் மோகன், ராம் சிங், சஷி பூஷண் குமார் மற்றும் லக்னஜித் ஆகிய 4 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. மற்ற உடல்களுக்கு டிஎன்ஏ சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. “இரவு முழுவதும் சுமார் 20 உடல்களின் டிஎன்ஏ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. மாதிரிகளைச் சேகரித்து, சேமிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். அவர்களின் உறவினர்களிடம் டிஎன்ஏ பொருத்தம் உறுதி செய்யப்பட்டவுடன், உடல்கள் உறவினர்களிடம் வழங்கப்படும்” என்று பட்டன்சேரு பகுதி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி தெரிவித்துள்ளார்.
பிரேத பரிசோதனை மற்றும் டிஎன்ஏ மாதிரி சேகரிப்புக்கு உதவுவதற்காக உஸ்மானியா பொது மருத்துவமனையிலிருந்து சிறப்பு தடயவியல் குழு வரவழைக்கப்பட்டுள்ளது. இதுவரை, 15 உடல்களுக்கு பிரேத பரிசோதனைகள் முடிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, குண்டுவெடிப்பு நிகழ்ந்து 24 மணி நேரம் ஆகிவிட்ட நிலையில், 12 பேர் காணவில்லை என்பது தெரியவந்துள்ளது. அவர்களைத் தேடும் பணிகள் சம்பவ இடத்திலும் அருகிலுள்ள பகுதிகளிலும் நடந்து வருகின்றன.
இதனிடையே, குண்டுவெடிப்பு நடந்த இடத்தை முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று பார்வையிடுகிறார். ஐடி மற்றும் தொழில்துறை அமைச்சர் டி. ஸ்ரீதர் பாபு மற்றும் வருவாய் அமைச்சர் பொங்குலேட்டி ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஆகியோரும் முதல்வருடன் இணைந்து பார்வைியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.