ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் பஷமைலாரம் பகுதியில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ளபஷமைலாரம் பகுதியில் சிகாச்சி ரசாயன தொழிற்சாலை கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு மைக்ரோ கிறிஸ்டலைஸ் செல்லுலாஸ் எனும் ரசாயன பவுடர் தயாரிக்கப்பட்டு வருகிறது. 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் நேற்று காலை 108 தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது, ஆலையில் இருந்த ரியாக்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு தூக்கி எறியப்பட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். 37 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
சிகாச்சி தொழிற்சாலையின் துணை தலைவரான எல்.எஸ்.கோஹன் நேற்று காலையில் தனது காரில் ஆலை வளாகத்துக்குள் வந்த நேரத்தில்தான் ரியாக்டர் வெடித்தது. இதில் அவரது காரும் தூக்கி எறியப்பட்டது. இதில் படுகாயம் அடைந்த கோஹன், மருத்துவமனையில் தீவிரசிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
ரசாயன தொழிற்சாலை விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் வருத்தமும், ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து தெலங்கானா அரசு விசாரணை குழு அமைத்துள்ளது. உயிரிழந்த தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்கும் என மாநில அமைச்சர் தாமோதர் ராஜநரசிம்மா தெரிவித்துள்ளார்.