ஹைதராபாத்: ராக்கி பண்டிகை நேற்று தெலங்கானா மற்றும் ஆந்திராவில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, நேற்று ஹைதராபாத்தில் தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அம்மாநில பெண் அமைச்சர்களான கொண்டா சுரேகா, சீதக்கா மற்றும் பலர் அவரது வீட்டிற்கு சென்று ராக்கி கயிறு கட்டி தங்களின் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினர்.
இதேபோன்று, தெலங்கானா மாநில சபாநாயகர் கட்டம் பிரசாத் குமார், துணை முதல்வர் பட்டி விக்ரமார்க்கா மற்றும் அமைச்சர் பொன்னாம் பிரபாகர் ஆகியோர் வீடுகளுக்கும் நேற்று பெண் அமைச்சர்கள் சென்று ராக்கி கயிறுகளை கட்டினர். இதே போன்று, ராக்கி பண்டிகையை முன்னிட்டு, நேற்று ஆந்திராவில் இந்துப்பூர் எம்.எல்.ஏ வும், நடிகருமான பாலகிருஷ்ணாவுக்கு, அவரது சகோதரி புரந்தேஸ்வரி ராக்கி கயிறு கட்டி, இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
ஆந்திர கல்வி துறை அமைச்சர் லோகேஷுக்கு அவரது தொகுதியான மங்களகிரி பெண்கள் சிலர் ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர். தனக்கு சகோதரிகள் இல்லாததால் என்னுடைய தொகுதியின் பெண்களே எனக்கு சகோதரிகள் என லோகேஷ் மகிழ்ச்சியுடன் ராக்கி கயிறு கட்டிக்கொண்டார். ராக்கி பண்டிகை தொடர்பாக நேற்று ஹைதராபாத்தில் பல பேருந்துகள், ரயில்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.