சென்னை: தெற்கு ரயில்வேயில் 5 பேர் உட்பட நாடு முழுவதும் 32 ரயில்வே கோட்ட மேலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய ரயில்வேயில் ஒவ்வொரு மண்டலங்களில் பணியாற்றும் ரயில்வே கோட்ட மேலாளர்கள் 2 ஆண்டுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், நாடு முழுவதும் 32 கோட்ட மேலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தெற்கு ரயில்வேயில் 5 கோட்ட மேலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சைலேந்திர சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, திருச்சியில் அன்பழகன் மாற்றப்பட்டு பாலக் ராம் நெகி நியமிக்கப்பட்டுள்ளார். மதுரையில் சரத் ஸ்ரீவஸ்தவா இடமாற்றம் செய்யப்பட்டு, ஓம் பிரகாஷ் மீனா நியமிக்கப் பட்டுள்ளார்.
திருவனந்தபுரம் கோட்ட மேலாளராக இருந்த மனிஷ் தப் லியால் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக, திவ்யகாந்த் சந்திரகார் நியமிக்கப்பட்டுள்ளார். பாலக்காட்டில் அருண்குமார் சதுர்வேதி மாற்றப்பட்டு, மதுகர் ரோத் நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல, நாட்டின் மற்ற பகுதிகளில் 27 கோட்ட மேலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை ரயில்வே வாரியம் பிறப்பித்துள்ளது.