புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி 4 தென் அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதுதொடர்பான தகவலை காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பவன் கேரா வெளியிட்டுள்ளார். ராகுல் காந்தியுடன் பவன் கேராவும் தென் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
4 நாடுகளை உள்ளடக்கிய இந்த பயணத்தின்போது அரசியல் தலைவர்களையும், பல்கலைக்கழக மாணவர்களையும், தொழில்துறை தலைவர்களையும் ராகுல் காந்தி சந்தித்து உரையாட உள்ளார் என்று பவன் கேரா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ராகுல் பயணிக்கும் 4 நாடுகளின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. எனினும் அந்த நாடுகளின் பட்டியலில் பிரேசில், கொலம்பியா நாடுகள் இடம்பெறும் என்று தெரிகிறது. மேலும், ராகுல் காந்தி எத்தனை நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் என்ற தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தென் அமெரிக்க நாடுகளின் அதிபர்கள் மற்றும் மூத்த அரசியல் தலைவர்களை, ராகுல் காந்தி சந்தித்துப் பேச திட்டமிட்டிருப்பதாகவும், ஜனநாயக மற்றும் இருநாட்டு நல்லுறவை பலப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு நடைபெறும் என்றும் பவன் கேராவின் எக்ஸ் தளத்தில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க வரி விதிப்பை தொடர்ந்து, இந்தியாவுடன் பல்வேறு தொழில் உறவுகளை மேம்படுத்துவது, வேலை வாய்ப்பு மற்றும் நாட்டில் உள்ள தொழில்வாய்ப்புகளைப் பற்றி தென் அமெரிக்க நாடுகளுக்கு எடுத்துரைக்கும் வகையிலும் தொழிலதிபர்கள் மற்றும் தொழில் அமைப்புகளையும் ராகுல் காந்தி சந்தித்துப் பேசவிருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.