புதுடெல்லி/ தூத்துக்குடி: தீவிரவாத நெட்வொர்க் மற்றும் தேசவிரோத சக்திகளுடன் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தமிழகத்தில் தூத்துக்குடி உட்பட நாடு முழுவதும் 5 மாநிலங்களில் மொத்தம் 22 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.
தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி, ஆள் சேர்ப்பு மற்றும் ஸ்லீப்பர் செல்களுக்கு எதிராக என்ஐஏ தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டனர். தீவிரவாத இயக்கங்களில் சேர்க்க, இளைஞர்களை இவர்கள் மூளைச் சலவை செய்ய முயற்சி செய்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், இதுபோன்ற தேசவிரோத சக்திகள், தீவிரவாதிகள் உடனான தொடர்பு குறித்து தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மொத்தம் 22 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
தூத்துக்குடியில் விசாரணை: அந்த வகையில், தூத்துக்குடியில் தங்கியிருந்த பிஹார் இளைஞரிடம் என்ஐஏ அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். அதுபற்றிய விவரம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உடைய பிஹார் மாநிலத்தை சேர்ந்த முகமது (22) என்ற இளைஞர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர் பிஹார் மாநிலத்தை சேர்ந்த முஸ்பிக் ஆலம் என்பவருடன் செல்போனில் அடிக்கடி பேசியது தெரியவந்தது.
மேலும், தூத்துக்குடி அருகே சிலுவைப்பட்டி பகுதியில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்துக்கு பெயின்ட் அடிக்கும் பணிக்காக பிஹாரில் இருந்து முஸ்பிக் ஆலம் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 2 என்ஐஏ அதிகாரிகள் நேற்று காலை 8.30 மணி அளவில் சிலுவைப்பட்டி வந்தனர். அங்கு ஒரு அறையில் முஸ்பிக் ஆலம் உட்பட 7 பேர் தங்கியிருந்தனர். முஸ்பிக் ஆலம் மற்றும் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் 3 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
முஸ்பிக் ஆலத்தின் செல்போனை ஆய்வு செய்தனர். பின்னர், முஸ்பிக் ஆலம் உட்பட 4 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு சென்றனர். போலீஸாரும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி முழு விவரங்களை கேட்டறிந்தனர். மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகளும் (ஐபி) அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் 9 இடங்கள், பிஹாரில் 8 இடங்கள், உத்தர பிரதேசத்தில் 2 இடங்கள், கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழகத்தில் தலா ஒரு இடம் என மொத்தம் 22 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் தனித்தனி என்ஐஏ குழுக்கள் ஒரே நேரத்தில் இந்த சோதனையில் ஈடுபட்டன.
தேசவிரோத சக்திகள் மற்றும் தீவிரவாத நெட்வொர்க் உடன்தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் அந்தந்த மாநில காவல் துறையுடன் இணைந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிப்பது, இளைஞர்களுக்கு மூளைச் சலவை செய்து ஆள்சேர்ப்பு நடத்துவது, எல்லைக்கு அப்பால் இருந்தபடி தீவிரவாத நடவடிக்கைகளை செயல்படுத்துபவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது ஆகியவற்றில் யாராவது ஈடுபடுகின்றனரா என்பதற்கான ஆதாரங்களை திரட்டுவதே இந்த சோதனையின் நோக்கம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.