புதுடெல்லி: தீபாவளி மற்றும் சாத் பண்டிகை காலங்களில் சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு ஆர்டிபி (Round Trip Package) என்ற புதிய திட்டத்தை சோதனை அடிப்படையில் ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி முன்பதிவு டிக்கெட் உடன் ரிட்டர்ன் டிக்கெட்டையும் சேர்த்து முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு ரிட்டர்ன் டிக்கெட்டில் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. டிக்கெட் முன்பதிவில் பயணிகளுக்கான சிரமங்களை குறைப்பதும், அவர்களுக்கு சவுகரியமாக பயணத்தை உறுதி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
ஆர்டிபி திட்டத்தின் கீழ் முன்பதிவு வரும் 14-ம் தேதி தொடங்க உள்ளது. அக்டோபர் 13 முதல் அக்டோபர் 26 வரை பயணத்தை தொடங்கும் மக்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். இவர்களின் ரிட்டர்ன் பயணம் நவம்பர் 17 முதல் டிசம்பர் 1 வரை முன்பதிவு செய்யப்பட வேண்டும். ஆர்டிபி திட்டத்தின் கீழ் இரு மார்க்கங்களில் உறுதி செய்யப்பட்ட பயணம், தொடங்கும் இடம், முடியும் இடம் ஒன்றாக இருப்பது ஒரே வகுப்பில் பயணம் செய்வதாக இருக்க வேண்டும்.
ரிட்டர்ன் டிக்கெட்டுக்கு அடிப்படை கட்டணத்தில் மட்டுமே 20% தள்ளுபடி கிடைக்கும். டைனமிக் கட்டண ரயில்கள் தவிர அனைத்து ரயில்களுக்கும் (சிறப்பு ரயில்கள் உட்பட), அனைத்து வகுப்புகளுக்கும் இத்திட்டம் பொருந்தும். இதற்கு ஐஆர்சிடிசி தளம் அல்லது முன்பதிவு கவுன்ட்டர்களில் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே அறிவித்துள்ளது.