திருவனந்தபுரம்: ஜூன் 14 முதல் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பழுதாகி நின்ற பிரிட்டிஷ் விமானப்படையின் எப்-35 ரக போர் விமானம், பழுது நீக்கப்பட்டு இன்று (ஜூலை 22) அங்கிருந்து புறப்பட்டது.
பிரிட்டிஷ் விமானப்படைக்கு சொந்தமான லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தயாரித்த 5ஆம் தலைமுறை ஸ்டெல்த் விமானமான எப்- 35 ரக போர் விமானம், ஜூன் 14 ஆம் தேதி அன்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் எரிபொருள் குறைவாக இருந்ததால் அவசரமாக தரையிறங்கியது. அதன்பின்னர் இந்த விமானத்தில் பழுது ஏற்பட்டதால், அதனை பழுது நீக்கும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியடைந்தன. இந்த விமானத்தின் இறக்கைகளை பிரித்து ஜம்போ விமானத்தில் ஏற்றிச் செல்வதிலும் சிரமங்கள் இருந்தன.
இதனால் பிரிட்டிஷ் விமான பொறியாளர்கள் குழு, ராயல் விமானப்படையின் ஏர்பஸ் ரக சரக்கு விமானத்தில் எப்-35 விமானத்தை பழுது பார்ப்பதற்கு உபகரணங்களுடன் ஜூலை 6 அன்று திருவனந்தபுரம் வந்தடைந்தனர். ரூ.924 கோடி மதிப்பிலான இந்த விமானம், பழுதுபார்க்கும் மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அதை சரிசெய்யும் பணியில் பிரிட்டிஷ் பொறியாளர்கள் ஈடுபட்டனர். இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடித்த பராமரிப்புப் பணிகளை முடித்த பொறியாளர்கள், பழுதுபார்க்கும் மையத்திலிருந்து விமானத்தை நேற்று வெளியே எடுத்தனர்.
பிரிட்டிஷ் அதிகாரிகள் தாங்கள் மேற்கொண்ட பராமரிப்புப் பணிகளின் விவரங்களை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், பிரிட்டிஷ் விமானப்படை விமானம் இன்று திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டது. அந்த விமானம் ஆஸ்திரேலியாவில் உள்ள டார்வினுக்கு செல்லும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஒரு மாதத்துக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த பிரிட்டிஷ் போர் விமானம், திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு பார்க்கிங் கட்டணமாக சுமார் ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும். விமானத்தின் அளவு, எடை, விமானம் தங்கியிருந்த நாட்கள் மற்றும் விமான நிலையத்தில் பணியாளர்கள் பயன்படுத்தும் வசதிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பார்க்கிங் கட்டணம் ஒரு நாளைக்கு சுமார் ரூ.15,000- ரூ.20,000 வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர பழுது நீக்கும் மையத்துக்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.