திருமலை: திருமலையில் உள்ள மாட வீதிகளில் நேற்று பிற்பகல் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள பக்தர்களிடம், அன்னபிரசாதம், குடிநீர் போன்றவை சரிவர வழங்கப்படுகிறதா? முதல் உதவி சிகிச்சைகள் உடனுக்குடன் கிடைக்கிறதா? குழந்தைகளுக்கு பால் வழங்கப்படுகிறதா? உள்ளிட்ட பல கேள்விகளை பக்தர்கள் மற்றும் அங்கிருந்த ஸ்ரீவாரி சேவகர்களிடம் அதிகாரி அனில்குமார் சிங்கால் கேட்டறிந்தார்.
கருட சேவைக்கு திருமலைக்கு நிமிடத்துக்கு ஒரு பேருந்து வீதம் திருப்பதியில் இருந்து திருமலைக்கு இயக்கப்பட்டன. பைக்குகள் அலிபிரியில் நிறுத்தப்படுகின்றன. வாகன சோதனைகள் உடனுக்குடன் நடத்தப்பட்டு திருமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மாட வீதிகளில் காத்திருக்கும் பக்தர்கள், தரிசனத்தை முடித்த பின்னர், அவர்கள் வெளியில் அனுப்பி வைக்கப்பட்டு, வெளியில் காத்திருக்கும் பக்தர்கள் 45 நிமிடத்துக்கு ஒருமுறை மாடவீதிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 6 ஆயிரம் கேமராக்கள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் கண்காணிக்கப்பட்டன. போலீஸார், தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்கள், ஆக்டோபஸ் கமாண்டோ வீரர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்