திருமலை: திருப்பதியிலிருந்து அலிபிரி வழியாக திருமலைக்கு செல்ல இனி ஃபாஸ்டேக் கட்டாயம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்து வரும் பக்தர்கள் ரயில் அல்லது விமானத்தில் வந்தாலும், அவர்கள் கார், ஜீப், வேன் போன்றவற்றின் மூலம் திருமலைக்கு செல்கின்றனர். மேலும் பலர் தங்களது சொந்த கார்கள் மூலம் குடும்பத்தாருடன் திருமலைக்கு வருகின்றனர்.
இந்நிலையில், வரும் 15-ம் தேதி முதல் திருமலைக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள் கண்டிப்பாக அவர்களின் வாகனங்களில் ஃபாஸ்டேக் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் வெளிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பக்தர்களின் பாதுகாப்பு கருதியும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் அலிபிரி சோதனைச்சாவடி வழியாக திருமலைக்கு கார், ஜீப், வேன்களில் செல்லும் போது ஃபாஸ்டேக் கண்டிப்பாக இருக்க வேண்டும். இது வரும் 15-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.
அப்படி ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள், ஃபாஸ்டேக் பெறுவதற்காக, அலிபிரி சோதனைச்சாவடி அருகே ஐசிஐசிஐ வங்கியின் ஃபாஸ்டேக் விநியோக மையமும் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் ஃபாஸ்டேக் பெற்று கொண்ட பின்னரே அந்த வாகனம் திருமலைக்கு அனுமதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.