புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் திருமணமான மகள்களுக்கும் தந்தையின் சொத்தில் பங்கு அளிக்கும் சட்டம் வருகிறது. இதன் மீது முக்கிய முடிவெடுக்கத் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு தயாராகிறது.
உத்தர பிரதேசத்தில் வருவாய் சட்டம்-2006-ன் பிரிவு 108 (2)-ன் கீழ், நில உரிமையாளர் இறந்த பிறகு, அந்த நிலம் அவரது மனைவி, மகன் மற்றும் திருமணமாகாத மகளின் பெயருக்கு மட்டுமே மாற் றப்படுகிறது. இதில் திருமணமான மகள்களுக்கு உரிமை இல்லை. இந்த விதியை திருத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், திருமணமான மகள்களுக்கு அவர்களின் தந்தையின் விவசாய நிலம் உள்ளிட்ட சொத்தில் சம பங்கு வழங்குவதற்கான திட்டத்தை மாநில அரசின் வருவாய் கவுன்சில் தயாரித்துள்ளது. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் அரசு அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, “முன்மொழியப்பட உள்ள திருத்தத்தில், திருமணமானவர் மற்றும் திருமணமாகாதவர் போன்ற வார்த்தைகள் பிரிவு 108-லிருந்து நீக்கப்படும்.
அதன் பிறகு, திருமணமான மகள்களும் மகன்கள் அல்லது திருமணமாகாத மகள்களைப் போலவே சம உரிமையைப் பெறுவார்கள். இதன்படி, வாரிசுரிமையைப் பதிவு செய்யும்போது திருமணத்தின் அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்காது. இது மட்டுமல்லாமல், இறந்த நில உரிமையாளரின் சகோதரிகளின் உரிமைகளில் உள்ள இந்த வேறுபாடும் நீக்கப்பட உள்ளது’’ என்றனர்.
இந்த முறை மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், உ.பி. அரசின் இந்த நடவடிக்கையும் மிகப்பெரிய சமூகப் புரட்சியாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், உ.பி.யில் மணமாகும் பெண் களுக்கு அவர்களது பெற்றோர் சார்பில் சீதனமாக பெரும்பாலும் நிலமே அளிக்கப்படுகிறது.
இதனால், மணமான பெண்களுக்கு அவர்களது குடும்பச் சொத்தில் சம உரிமை கிடைக்காத நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக பெண்கள் சம உரிமை மீதான முதல்வர் யோகியின் இந்த சட்டத்துக்கு உயர் சமூகத்தினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.