அமராவதி: திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமிக்கு ரூ.140 கோடி மதிப்புள்ள 121 கிலோ தங்கம் வழங்க பக்தர் ஒருவர் முன்வந்துள்ளதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தின் மங்களகிரியில் நடைபெற்ற வறுமை ஒழிப்பு திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய சந்திரபாபு நாயுடு, “திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமிக்கு 121 கிலோ தங்கம் வழங்க பக்தர் ஒருவர் முன்வந்துள்ளார். இதன் மதிப்பு ரூ.140 கோடி. அவர் தனது பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார். எனவே, என்னால் சொல்ல முடியவில்லை.
வெங்கடேஸ்வர சுவாமியின் பக்தரான அவர், சொந்தமாக தொழில்தொடங்க வேண்டும் என பிரார்த்தனை செய்துள்ளார். அவரது பிரார்த்தனை நிறைவேறியது. இதையடுத்து, அவர் தனது நிறுவனத்தின் பங்குகளில் 60 சதவீதத்தை விற்றுவிட்டார். இது 1.5 பில்லியன் அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் ரூ.6,000 கோடி முதல் ரூ.7,000 கோடி வரை.
இந்நிலையில், திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமிக்கு அணிவிக்கப்படும் நகைகள் குறித்து விசாரித்துள்ளார். ஒரு நாளைக்கு 120 கிலோ எடை கொண்ட தங்க நகைகள் சுவாமிக்கு அணிவிக்கப்படுகிறது என கூறி இருக்கின்றனர். எனவே, 121 கிலோ தங்கத்தை சுவாமிக்கு தானமாக வழங்க அவர் முன்வந்துள்ளார். தனக்கு அதிக செல்வத்தை அளித்த சுவாமிக்கு நன்றிக்கடன் செலுத்தும் நோக்கில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.