புதுடெல்லி: வெளிநாடு செல்லும் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு விரைவில் குடியேற்ற ஒப்புதல் வழங்கும் (எப்டிஐ -டிடிபி) திட்டத்தை மேலும் 5 விமான நிலையங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார்.
வெளிநாடு செல்லும் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் குடியேற்ற ஒப்புதலுக்காக வெகு நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இவர்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்கும் வகையில் ‘ஃபாஸ்ட் ட்ராக் இமிக்ரேஷன் – ட்ரஸ்டட் டிராவலர் திட்டம் (எப்டிஐ -டிடிபி) கொண்டு வரப்பட்டது.
இந்த வசதி டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் குடியேற்றத்துக்கான கவுன்டரில் காத்திருக்காமல் இ-நுழைவு வாயில் வழியாக விரைவில் ஒப்புதல் பெற்று வர முடியும்.
இந்த வசதியை பெற www.ftittp.mha.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயோ மெட்ரிக் தகவல்களை அளிக்க வேண்டும். இரண்டாவது கட்டமாக எப்டிஐ-டிடிபி திட்டம் கடந்தாண்டு செப்டம்பரில் மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி மற்றும் அகமதாபாத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது 3-வது கட்டமாக எப்டிஐ-டிடிபி திட்டத்தை லக்னோ, திருவனந்தபுரம், திருச்சி, கோழிக்கோடு மற்றும் அமிர்தசரஸ் ஆகிய விமான நிலையங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த சிறப்பு திட்டம் மூலம் இந்தியர்களுக்கு விமான நிலையத்தில் குடியேற்ற ஒப்புதல் பெறுவதும் மிகவும் எளிதாகிவிட்டது என அமித் ஷா கூறினார். எப்டிஐ -டிடிபி திட்டத்தில் ஒரு முறை விண்ணப்பித்தால் 5 ஆண்டு அல்லது பாஸ்போர்ட் காலாவதி ஆகும் காலம் இதில் எது முன்போ அதுவரை பயன்படுத்தலாம்.