புதுடெல்லி: மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், ஜூன் மற்றும் நவம்பர் ஆகிய 3 மாதங்களில் நடைபெற உள்ளன. அடுத்த ஆண்டு நவம்பருக்குள் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் ஓய்வு பெற உள்ளனர்.
அந்தப் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் கார்கே, மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் எச்.டி.தேவகவுடா ஆகியோரும் உள்ளனர். இவர்களது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூன் 25-ம் தேதி முடிவடைகிறது. உ.பி. சார்பில் அதிகபட்சமாக 10 எம்.பி.க்கள் அடுத்த ஆண்டு நவம்பரில் ஓய்வு பெறுகின்றனர்.
அவர்களில் மத்திய இணை அமைச்சர்கள் ஹர்தீப் சிங் புரி, பி.எல்.வர்மா இடம் பெற்றுள்ளனர். மகாராஷ்டிராவில் 7 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிகிறது. அவர்களில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா (உத்தவ் அணி) பிரியங்கா சதுர்வேதி மற்றும் மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அதாவலே ஆகியோர் பதவிக் காலத்தை நிறைவு செய்கின்றனர்.
விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள பிஹாரில் ஆளும் ஐ.ஜ.த மக்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், எதிர்க்கட்சியான ஆர்ஜேடியின் ஏ.டி.சிங் பிரேம், முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா ஆகியோரும் அடங்குவர். ஜார்க்கண்டின் முன்னாள் முதல்வரும் ஜேஎம்எம் நிறுவனருமான ஷிபு சோரன் எம்.பி.யும் ஓய்வுபெறுகிறார். குஜராத் காங்கிரஸ் எம்.பி. சக்திசிங் கோஹிலும் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெற உள்ளார்.
மத்திய பிரதேசத்தில் மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கும் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெறுகின்றனர். ஆந்திராவில் தெலங்கானா ஜனநாயக கட்சியின் சனா சதீஷ் பாபு, ஒய்எஸ்ஆர்சிபி தலைவர்கள் அயோத்தி ராமி ரெட்டி, பரிமல் நத்வானி, பில்லி சுபாஷ் ஆகியோர் ஓய்வு பெறுகின்றனர். தெலங்கானாவில் காங்கிரஸ் தலைவர்அபிஷேக் மனு சிங்வி ஏப்ரல் 2026-ல் ஓய்வு பெறுகிறார்.
தமிழ்நாட்டில் 6 எம்.பி.க்களின் பதவிகளும் அடுத்த ஆண்டு நிறைவடைகிறது. இவர்களில் திமுகவின் என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், திருச்சி சிவா, கனிமொழி சோமு ஆகியோர் உள்ளனர். அதிமுக சார்பில் ஜி,கே.வாசன் மற்றும் தம்பிதுரை பதவிகள் காலாவதியாகின்றன. ஜுலை 24-ல் பாமக.வின் அன்புமணி பதவி நிறைவடைகிறது. அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி.கே.வாசனின் மாநிலங்களவை இடம் அடுத்து தேமுதிகவுக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளன.