புதுடெல்லி: மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி தஹாவூர் ராணாவிடம் குரல் மற்றும் கையெழுத்து மாதிரியை சேகரிக்க என்ஐஏ-வுக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பை ரயில் நிலையம் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 10-ல் 9 தீவிரவாதிகளும் உயிரிழந்தனர். உயிருடன் பிடிபட்ட ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி தஹாவூர் ராணா அமெரி்க்காவிலிருந்து கடந்த மாதம் அழைத்துவரப்பட்டார். அவரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணாவின் என்ஐஏ காவலை மேலும் 12 நாட்களுக்கு நீட்டித்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தர்ஜித் சிங் ஏப்ரல் 28-ம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில், ராணாவின் குரல் மற்றும் கையெழுத்து மாதிரியை சேகரிக்க என்ஐஏ சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு அனுமதி அளித்து ஏப்ரல் 30-ம் தேதி நீதிபதி உத்தரவிட்டார்.