புதுடெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பு முன்பே நடத்தப்பட்டிருக்க வேண்டும். இதில் நான் தவறிழைத்துவிட்டேன் என ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற ஓபிசி அமைப்பு ஒன்றின் நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “நான் கடந்த 2004 முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். 21 வருடங்கள் ஆகிவிட்டன. திரும்பிப் பார்த்து சுயபரிசோதனை செய்து கொள்ளும்போது, நான் எங்கெல்லாம் சரியாகச் செய்தேன், எங்கெல்லாம் தவற விட்டேன் என்பதைப் பார்க்கிறேன்.
நிலம் கையகப்படுத்துதல் மசோதா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், உணவு மசோதா, பழங்குடியினருக்கான போராட்டம் என இவற்றையெல்லாம் நான் தவறாகச் செய்தேன்.
தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினரைப் பொறுத்தவரை நான் சரியாகச் செயல்பட்டேன். எனவே, நான் அதில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும். அதேபோல், பெண்கள் பிரச்சினைகளிலும் நான் நல்ல மதிப்பெண்களைப் பெற வேண்டும்.
அதேநேரத்தில், எனது செயல்பாடுகளைத் திரும்பிப் பார்க்கும்போது ஒரு விஷயத்தில் எனக்கு குறை இருக்கிறது. நான் தவறு செய்துள்ளேன். ஓபிசி பிரிவை பாதுகாக்க வேண்டிய விதித்தில் நான் பாதுகாக்கவில்லை என்பதை நான் தெளிவாகக் காண்கிறேன்.
தலித் பிரச்சினைகளை நான் சரியாக புரிந்து கொண்டேன். அதேபோல், பழங்குடியினரின் பிரச்சினைகளையும் ஒருவர் சரியாக புரிந்து கொள்ள முடியும். ஆனால், ஓபிசி மக்களின் பிரச்சினைகள் மறைக்கப்பட்டுள்ளன.
ஓபிசி பிரிவினர் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி எனக்கு இன்னும் அதிகமாக தெரிந்திருந்தால், சாதிவாரி கணக்கெடுப்பை நானே செய்திருப்பேன். அதை நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது. இது என்னுடைய தவறு; காங்கிரஸ் கட்சியின் தவறு அல்ல.
எனினும், தற்போது சாதிவாரி கணக்கெடுப்புக்கு தெலங்கானா மாநிலம் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது. அங்கே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் முறை முன்னுதாரணமானது. இனி நடத்தப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு இந்த அடிப்படையிலேயே நடக்கும். அந்த வகையில், முன்பே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாததும் ஒருவகையில் நல்லதுதான்.
தெலங்கானாவில் நடத்தப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு அரசியல் பூகம்பம். இது நாட்டின் அரசியல் தளத்தையே உலுக்கியுள்ளது. இதன் தாக்கம் பெரிதாக இருக்கும். காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம்.” என தெரிவித்தார்.