நாக்பூர்: தலைவர்கள் 75 வயதில் ஓய்வுபெற வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். வரும் செப்டம்பரில் பிரதமர் மோடிக்கு 75 வயது நிறைவடையும் சூழலில் அவர் இவ்வாறு கூறியிருப்பது பாஜகவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் மோரோ பந்த் பிங்க்லே குறித்த புத்தக வெளியீட்டு விழா நாக்பூரில் 9-ம் தேதி நடைபெற்றது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டு, புத்தகத்தை வெளியிட்டார். விழாவில் அவர் பேசும்போது, ‘‘உங்களுக்கு 75 வயது ஆகிறது என்றால், நீங்கள் ஒதுங்கிக் கொண்டு மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும்’’ என்றார்.
வரும் செப்டம்பரில் பிரதமர் மோடிக்கு 75 வயது நிறைவடைகிறது. இதை சுட்டிக்காட்டியே, மோகன் பாகவத் இவ்வாறு கூறியதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. அவரது கருத்து பாஜகவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடிக்கு செப்டம்பர் 17-ம் தேதி 75 வயது ஆகிறது என்பதை மோகன் பாகவத் மிக அழகாக நினைவுபடுத்தி உள்ளார். அதேநேரம், மோகன் பாகவத்துக்கு செப்டம்பர் 11-ம் தேதி 75 வயது ஆகிறது. இதே கருத்தை அவரிடமும் பிரதமர் மோடி சொல்லலாம். எப்படியோ.. ஓர் அம்பு, இரு இலக்குகள்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 மக்களவை தேர்தலுக்கு பிறகு, பாஜகவில் 75 வயது ஆகும் தலைவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. அந்த வகையில், மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. குஜராத் முதல்வராக இருந்த ஆனந்தி பென், மத்திய அமைச்சரவையில் இருந்த நஜ்மா ஹெப்துல்லா ஆகியோர் 75 வயதை எட்டியதும் பதவியை ராஜினாமா செய்தனர். கடந்த 2019 மற்றும் 2024 மக்களவை தேர்தலின்போது 75 வயதை எட்டிய தலைவர்களுக்கு பாஜகவில் சீட் வழங்கப்படவில்லை.
இந்த விவகாரம் குறித்து அரசியல் நோக்கர்கள் கூறியதாவது: கடந்த 2022-ல் பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா, கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு 79 வயது. அவர் 75 வயதை தாண்டிய பிறகும் கர்நாடக முதல்வராக பதவி வகித்தார். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக 76 வயதான சத்தியநாராயண் ஜாதியா நியமிக்கப்பட்டார். 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று பாஜகவில் அதிகாரப்பூர்வமாக எந்த விதியும் கிடையாது. வரும் 2029 மக்களவை தேர்தலிலும் மோடியே பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்று மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் ஏற்கெனவே தெளிவுபடுத்தி உள்ளனர். இவ்வாறுஅவர்கள் தெரிவித்துள்ளனர்.