பெங்களூரு: தர்மஸ்தலா வழக்கில் கைது செய்யப்பட்ட புகார்தாரர் சின்னையா நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். கர்நாடகாவின் தட்சிண கன்னட மாவட்டம், தர்மஸ்தலாவில் புகழ்பெற்ற மஞ்சுநாதா கோயில் உள்ளது. அங்கு கடந்த 1995 முதல் 2014 வரை தூய்மைப் பணியாளராக வேலை செய்த சின்னையா கடந்த ஜூனில் தர்மஸ்தாலா காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்தார்.
அதில், “மஞ்சுநாதா கோயிலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல்களை நான் புதைத்தேன்’’ என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நடத்திய விசாரணை, சோதனையில் சின்னையா பொய் புகார் அளித்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். இந்த சூழலில் கர்நாடகாவின் பெள்தங்கடி நகர நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில் சின்னையா நேற்று முன்தினம் வாக்குமூலம் அளித்தார்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறும்போது, “தர்மஸ்தலா மஞ்சுநாதா கோயில் நிர்வாகம் மீது பொய் புகார்களை அளிக்க சின்னையாவை சிலர் தூண்டி உள்ளனர். இதன்பேரில் அவர் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார். இதை நீதிபதிகள் முன்னிலையில் அவர் ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.
யாருடைய தூண்டுதலின்பேரில் சின்னையா பொய் புகார்களை கூறினார் என்பதை இப்போதைக்கு பகிரங்கமாக கூற முடியாது’’ என்று தெரிவித்தன. கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் கூறும்போது, “தர்மஸ்தலா வழக்கில் உண்மை என்ன என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறோம். இந்த வழக்கின் இறுதி அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.
இதுதொடர்பாக முதல்வர் அல்லது உள்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடுவார்கள்’’ என்று தெரிவித்தார். மஞ்சுநாதா கோயிலின் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே கூறும்போது, “சிறப்பு விசாரணை குழுவை அமைத்த கர்நாடக அரசுக்கு நன்றி. இதன்காரணமாகவே உண்மை வெளிச்சத்துக்கு வருகிறது’’ என்று தெரிவித்தார்.