சென்னை: தமிழகத்தில் பிஹாரிக்கள் தாக்கப்பட்டபோது ஸ்டாலின் எங்கே போனார்? என்று ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹாரில் வாக்காளர் அதிகார யாத்திரை பேரணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட நிலையில், பிஹாரிக்கள் மீதான அக்கறையில் பாரபட்சம் இருப்பதாகக் கூறி பிரசாந்த் கிஷோர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
பிரசாந்த் கிஷோர் கூறியதாவது: இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிஹார் வந்துள்ளார். இதே பிஹாரின் மைந்தர்கள் தமிழகத்தில் கொல்லப்பட்ட போது அவர் எங்கே சென்றிருந்தார்.? அவரின் இந்தத் தன்மை ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவிடமும் இருக்கிறது. அதேபோல் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும், “பிஹாரிக்கள் அடிமை வேலை செய்யப் பழக்கப்பட்டவர்கள்.” என்று விமர்ச்சித்தவர்தானே?. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வாக்காளர் அதிகார யாத்திரை – தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிஹாரில் 1,300 கிலோ மீட்டர் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’யை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.
ஆகஸ்ட் 17 ஆம் தேதி சசாரமில் இருந்து தொடங்கிய 16 நாள் யாத்திரை, செப்டம்பர் 1 ஆம் தேதி பாட்னாவில் ஒரு பேரணியுடன் முடிவடைகிறது. இந்த யாத்திரையில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், சிபிஎம்எல் தலைவர்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டுள்ளனர்.
நேற்று முசாபர்பூரில் நடைபெற்ற யாத்திரையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அவர், ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருடன் திறந்த காரில் சென்று மக்களை சந்தித்தார்.
இதனை தொடர்ந்து முசாபர்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், “உங்களை எல்லாம் பார்ப்பதற்காகத்தான் இரண்டாயிரம் கிலோ மீட்டர் கடந்து நான் இங்கே வந்திருக்கிறேன்.
இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம், அதற்கான போர்க்குரலை பிஹார் எழுப்பியிருக்கிறது. இதுதான் வரலாறு! ‘லோக்நாயக்’ ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஜனநாயகத்தின் குரலை, சோசலிசத்தின் குரலை எதிரொலித்தார். அதற்காக மக்கள் சக்தியை அவர் திரட்டினார்.
அந்தப் பணியைத்தான், அருமைச் சகோதரர் ராகுல் காந்தியும், தம்பி தேஜஸ்வீயும் இங்கு செய்து கொண்டிருக்கிறார்கள். பாஜகவின் துரோக அரசியல் தோற்கப் போகிறது. தேர்தலுக்கு முன்பே உங்களின் வெற்றி உறுதியாகிவிட்டது.” என்று கூறியிருந்தார்.