திருப்பதி: தன்னை கடித்த பாம்பின் தலையை கடித்த போதை ஆசாமி ஒருவர் தற்போது தீவிர மருத்துவ சிகிச்சையில் உள்ளார். ஆந்திர மாநிலத்தின் திருப்பதி மாவட்டம், தொட்டம்பேடு மண்டலம் சிய்யாவரம் கிராமத்தில் கங்கையம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி, இதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் (48) என்பவர் இரவில் மது அருந்துவிட்டு தள்ளாடியவாறு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். வழியில் ஒரு நாகப்பாம்பு அவரின் காலை கடித்து விட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ், “என்னையே கடிக்கிறாயா ?” என கேட்டு அந்தப் பாம்பை பிடித்துள்ளார்.
பிறகு குடி போதையில் அந்த பாம்பின் தலையை கடித்து துப்பியுள்ளார். மேலும் இறந்த பாம்பின் உடலுடன் வீட்டுக்கு சென்ற அவர் தூங்கி விட்டார். அதிகாலையில் வெங்கடேஷ் மயங்கிய நிலையில் இருப்பதையும் அருகில் பாம்பின் உடல் கிடப்பதையும் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வெங்கடேஷக்கு திருப்பதி ருய்யா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.