பெங்களூரு: கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான ரன்யா ராவ் (32), துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக கடந்த மார்ச்சில் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ. 2.8 கோடி மதிப்பிலான தங்கமும், ரூ.2.4 கோடி ரொக்கமும் சிக்கியது. இவ்வழக்கில் ரன்யா ராவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த ஜூலையில் ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதனிடையே ரன்யா ராவிடம் டிஆர்ஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் 46 முறை துபாய், ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு சென்றது தெரியவந்தது.
இதில் 27 முறை துபாய்க்கு மட்டும் சென்று தங்கம் கடத்தி வந்ததும் கண்டறியப்பட்டது. அவரிடம் இருந்து தங்கத்தை வாங்கிய தெலுங்கு நடிகரும் ரன்யாவின் நண்பருமான தருண் ராஜு, நகைக் கடை அதிபர் ஷாகில்ஜெயின், தொழிலதிபர் பரத் ஜெயின் ஆகியோரும் சிக்கினர்.
இதையடுத்து ரன்யா ராவ் உள்ளிட்ட நால்வர் மீதும் அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நால்வரும் 127.3 கிலோ தங்கம் கடத்தி வந்தது உறுதியானதை தொடர்ந்து ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
கூட்டாளிகளுக்கும் அபராதம்: மேலும் சட்ட விரோதமாக 72.6 கிலோ தங்கம் கடத்தியதாக தருண் ராஜுவுக்கு ரூ.62 கோடியும், 63.61 கிலோ தங்கம் கடத்திய ஷாகில் ஜெயின், பரத் ஜெயின் ஆகியோருக்கு தலா ரூ.53 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக டிஆர்ஐ தெரிவித்துள்ளது. இந்த அபராத தொகையை 3 மாதங்களுக்குள் செலுத்தாவிடில் அவர்களுக்கு சொந்தமான சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என டிஆர்ஐ எச்சரித்துள்ளது.