புதுடெல்லி: அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளையும் இந்திய தபால் துறை ரத்து செய்துள்ளது.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு கடந்த புதன்கிழமை (ஆக.27) அமலுக்கு வந்தது. ஏற்கெனவே விதித்த 25 சதவீத வரியோடு இந்த கூடுதல் 25 சதவீதமும் சேர்ந்துள்ள நிலையில், 50 சதவீத வரி விதிப்பு இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும் என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால், தொழிலாளர் சார்ந்த துறைகள் ஏற்றுமதி 70 சதவீதம் அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த வரிவிதிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவிற்கான அனைத்து அஞ்சல் சேவைகளையும் இந்தியா நிறுத்தியுள்ளது.
கடிதங்கள், ஆவணங்கள் மற்றும் 100 டாலர் வரையிலான பரிசுகள் உட்பட அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து வகை அஞ்சல்களையும் நிறுத்தி வைப்பதாக தபால் துறை அறிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 22 அன்று, 100 டாலர் வரையிலான மதிப்புள்ள ஆவணங்கள்/கடிதங்கள் மற்றும் பரிசுகளைத் தவிர, அமெரிக்காவிற்கு அஞ்சல் சேவைகளை முன்பதிவு செய்தல் மற்றும் அனுப்புவதை ஆகஸ்ட் 25 முதல் நிறுத்தி வைப்பதாகத் துறை தெரிவித்திருந்தது..
முன்னதாக அஞ்சல் துறை வெளியிட்ட அறிவிப்பில் “புதிய விதிமுறைகளின் காரணமாக ஆகஸ்ட் 25 க்குப் பிறகு சரக்குகளை ஏற்க முடியாது என்று அமெரிக்காவுக்குச் செல்லும் விமான நிறுவனங்கள் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளன. மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, கடிதங்கள்/ஆவணங்கள் மற்றும் 100 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் தவிர, ஆகஸ்ட் 25 முதல் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து வகையான அஞ்சல் பொருட்களின் முன்பதிவையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது” என்று கூறப்பட்டிருந்தது.