புதுடெல்லி: இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அமெரிக்கா 5 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியது என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அது குறித்த உண்மையை தேசம் அறிய வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மோடி ஜி, 5 ஜெட் விமானங்கள் பின்னணியில் உள்ள உண்மை என்ன? தேசம் அதை அறிந்து கொள்ளும் உரிமை உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். கூடவே ட்ரம்ப்பின் பேச்சையும் டேக் செய்துள்ளார்.
ட்ரம்ப் கூறியது என்ன? – குடியரசு கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த இரவு விருந்தின்போது பேசிய டொனால்டு ட்ரம்ப், “இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அப்போது, போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 4 அல்லது 5 விமானங்கள் வீழ்த்தப்பட்டன. ஆனால், 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என நினைக்கிறேன். ஏனெனில், நிலைமை தொடர்ந்து மோசமாகிக் கொண்டே இருந்தது. இல்லையா?
இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையை நிறுத்திக்கொள்வதில் முன்னும் பின்னுமாக இருந்தன. அது பெரிதாகிக் கொண்டே இருந்தது. வர்த்தகத்தின் மூலம் நாங்கள் அதை முடிவுக்குக் கொண்டு வந்தோம். அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறீர்கள். நீங்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்கிக் கொள்வீர்கள் எனில், குறிப்பாக அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவீர்கள் எனில், உங்களுடன் நாங்கள் வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட மாட்டோம் என கூறினேன். ஏனெனில், இரண்டு நாடுகளுமே சக்திவாய்ந்த அணுஆயுத நாடுகள்.
8 ஆண்டுகளில் எந்த அமெரிக்க நிர்வாகமும் சாதிக்க முடியாததை ஆறு மாதங்களில் நாங்கள் சாதித்துள்ளோம். இதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் நிறைய போர்களை நிறுத்தி உள்ளோம். இவை கடுமையான போர்கள்” என ட்ரம்ப் தெரிவித்தார்.
காங்கிரஸ் எதிர்வினை: இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு பதிவில், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போரில் 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதோடு, வர்த்தகத்தை முன்நிறுத்தி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதாக 24-வது முறையாகக் கூறியுள்ளார். ட்ரம்ப் இப்படி தொடர்ந்து சொல்லி வருகிறார், ஆனால் நரேந்திர மோடி அமைதியாக இருக்கிறார். வர்த்தகத்துக்காக நாட்டின் மரியாதையை நரேந்திர மோடி ஏன் சமரசம் செய்தார்?” என்று கேள்வி எழுப்பியிருந்தது.
‘ஒரு விளக்க அறிக்கை தர வேண்டும்’ – இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், “நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கூட இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் ட்ரம்ப் ஏவுகணை 24-வது முறையாக ஏவப்பட்டுள்ளது. ட்ரம்ப் வெளியிட்டள்ள பரபரப்பான புதிய விஷயம் என்னவென்றால், 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என கூறியிருப்பது.
டொனால்டு ட்ரம்ப் உடன் பல ஆண்டுகளாக நட்பையும் அரவணைப்பையும் பெற்று வருபவர் பிரதமர் மோடி. எனவே, கடந்த 70 நாட்களாக ட்ரம்ப் என்ன கூறி வருகிறார் என்பது குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் ஓர் அறிக்கையை வெளியிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
நினைவுகூரத்தக்கப் பேச்சு: ட்ரம்ப் பேச்சு சர்ச்சையாகியுள்ள நிலையில், பாகிஸ்தானுடனான மோதலில் இந்திய விமானப்படை சில போர் விமானங்களை இழந்ததை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் உறுதிப்படுத்தியது நினைவுகூரத்தக்கது. சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்க்ரி-லா உரையாடலில் கலந்துகொண்ட அவர், ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தியிருந்தார். இழப்புகளின் எண்ணிக்கையை வெளியிட மறுத்த அவர், தவறுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டதாகவும் கூறினார். இந்தச் சூழலில் 5 ஜெட் விமானங்களை வீழ்த்தியதாக ட்ரம்ப் கூறியுள்ளதை அனில் சவுகான் பேச்சுடன் தொடர்புபடுத்தி விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.