புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று (ஜூலை 21) தொடர் அமளி காரணமாக மக்களவை 3 முறை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய கருத்துக்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்குக் கூடியது. மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, டி.ஆர்.பாலு, அகிலேஷ் யாதவ் என ஏறக்குறைய முழு அவையும் நிரம்பி இருந்தது.
தொடக்க நிகழ்வாக, மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் குறிப்புகளை வாசித்தார். கிஷன் கபூர் (இமாச்சலப் பிரதேசம்), பகத் ராம் (பஞ்சாப்), குமரி அனந்தன் (தமிழ்நாடு), கிரிஜா வியாஸ் (ராஜஸ்தான்), மினாட்டி சென் (மேற்கு வங்கம்), சுக்தேவ் சிங் திண்ட்சா (பஞ்சாப்), சோட்டி சிங் யாதவ் (உத்தரப் பிரதேசம்), ஆனந்த் சிங் (உத்தரப் பிரதேசம்) ஆகிய மறைந்த உறுப்பினர்கள் ஆற்றிய பங்களிப்பு மற்றும் சாதனைகள் குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் குறிப்புகளை வாசித்தார். இதைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்காக அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த சபாநாயகர், பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் துளிகூட ஏற்காது என குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் சபாநாயகர் இரங்கல் தெரிவித்தார்.
இதையடுத்து, கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது உறுப்பினர்களை சபாநாயகர் ஓம் பிர்லா அழைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்பிக்கள், இந்தியா – பாகிஸ்தான் போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் கூறிய கருத்துக்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவைக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், டொனால்டு ட்ரம்ப்பின் கருத்து தொடர்பாக பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதை ஏற்க மறுத்த சபாநாயகர் ஓம் பிர்லா, அனைவரும் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து அமளி நீடித்து வந்த நிலையில், சில உறுப்பினர்கள் தங்கள் கேள்விகளை முன்வைத்தனர். எனினும், அமளி தொடர்ந்ததால், அவையை 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இதையடுத்து, அவை நண்பகல் 12 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது, தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மதியம் 2 மணிக்கு அவை கூடியதும், மீண்டும் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்ததால் அவை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 4 மணிக்கு அவை கூடியதும் மீண்டும் அமளி நீடித்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “பாதுகாப்புத் துறை அமைச்சர் பேச அனுமதிக்கப்படுகிறார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் எவருக்கும் பேச அனுமதி வழங்கப்படுவதில்லை. இது ஒரு புதிய அணுகுமுறையாக உள்ளது. அரசுக்கு ஆதரவாக இருப்பவர்களாக இருந்தால் அவைக்குள் பேச முடியும். எதிர்க்கட்சி எம்பிக்களாக இருந்தால் பேச அனுமதி கிடைக்காது.” என குற்றம் சாட்டினார்.