புதுடெல்லி: டெல்லியில் பிரபல சாமியாராக இருந்தவர் சைதன்யானந்தா பாபா என்று அழைக்கப்படும் பார்த்தசாரதி (62). இவர், பல கோடிகளில் நன்கொடைகள் பெற்று டெல்லியில் ஏழை சிறுமிகள் மற்றும் பெண்களுக்கான ஆசிரமங்களை நடத்தி வந்தார்.
இந்நிலையில் இவர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக 17 பெண்கள் டெல்லி போலீஸாரிடம் சமீபத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து தலைமறைவான சைதன்யானந்தாவை தீவிர தேடலுக்கு பிறகு உ.பி.யின் ஆக்ராவில் போலீஸார் கைது செய்தனர்.
சைதன்யானந்தாவிடம் இருந்து 3 செல்போன்கள், ஒரு ஐபேடு, 2 பாஸ்போர்ட்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. லண்டனின் ஒரு வாட்ஸ்ஆப் எண்ணை இவர் பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்த வாட்ஸ்ஆப் தகவல் பரிமாற்றத்தில் இவருக்கு அரபு ஷேக்குகளுடன் தொடர்பு இருப்பதும் அவர்களுக்கு தனது ஆசிரம பெண்களை அனுப்பி வந்ததும் தெரியவந்துள்ளது. இதன்மூலம் இவர் சர்வதேச அளவில் பாலியல் மோசடி செய்து வந்தது உறுதியாகியுள்ளது. அவரது வாட்ஸ்ஆப் உரையாடல்களில் இடம்பெற்ற துபாய் ஷேக்குகளை அடையாளம் காணும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து டெல்லி காவல்துறை துணை ஆணையர் அமித் கோயல் கூறுகையில், “போலி சாமியாரின் செல்போன்களில் விமானப் பணிப்பெண்களின் புகைப்படங்கள் மற்றும் பயோடேட்டாக்கள் உள்ளன.
இளம் பெண்களுக்கு விமானப் பணிப்பெண் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து அவர்களை சைதன்யானந்தா தனது வலையில் சிக்க வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. சிறுமிகளுக்கு நகைகள், கைக்கடிகாரங்கள் மற்றும் விலையுயர்ந்த கண்ணாடிகளை பரிசாக அளித்ததன் மூலம் அவர்களின் நம்பிக்கையை இவர் பெற்றுள்ளார்” என்று தெரிவித்தனர்.
தனது ஆசிரமங்களில் கல்வி நிறுவனங்களையும் நடத்தி வந்த சைதன்யானந்தாவிடம் அவரது நம்பிக்கைக்குரிய பெண்களும் பணியாற்றி வந்தனர். இவர்களையும் சுற்றிவளைத்த டெல்லி போலீஸார் இவர்கள் முன்பாக சைதன்யானந்தாவிடம் விசாரிக்க உள்ளனர்.