புதுடெல்லி: 2020 டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில் கைதான செயற்பாட்டாளர் ஷர்ஜீல் இமாம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உமர் காலித் மற்றும் பிறரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை எந்த காரணமும் குறிப்பிடாமல் செப்டம்பர் 22 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று இன்று கூறியது. இவ்வழக்கில் ஷர்ஜீல் இமாம் சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார்.
வழக்கின் பின்னணி என்ன? – குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி வடகிழக்கு பகுதியில் கலவரம் நடைபெற்றது. இந்த கலவரத்தில் இஸ்லாமியர்கள் 40 பேரும், இந்துக்கள் 13 பேரும் என 53 பேர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இந்த வழக்கில் சமூக செயற்பாட்டாளர் ஷர்ஜீல் இமாம் மற்றும் மாணவர் தலைவர்களான உமர் காலித் உள்ளிட்டோரை டெல்லி காவல்துறை கைது செய்தது. இந்தக் கலவரத்தை அவர்கள் திட்டமிட்டதாக போலீஸாரால் குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் மீது உபா சட்டம் மற்றும் பிஎன்எஸ் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைதான ஷர்ஜீல் இமாம், உமர் காலித் உள்ளிட்டோரின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் ஷாலிந்தர் கவுர் ஆகியோர், கடந்த செப்.2 ஆம் தேதி அவர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தனர். முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதியில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பங்கு உண்டு என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்று இவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
இமாம், காலித் தவிர, செயற்பாட்டாளர்கள் குல்பிஷா பாத்திமா, காலித் சைஃபி, அதர் கான், முகமது சலீம் கான், ஷிஃபா-உர்-ரஹ்மான், மீரான் ஹைதர் மற்றும் ஷதாப் அகமது ஆகியோருக்கும் உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்துவிட்டது. மற்றொரு குற்றவாளியான தஸ்லீம் அகமதுவின் ஜாமீன் மனுவும் அதே நாளில் தனி அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.