புதுடெல்லி: டெல்லி அருகேயுள்ள குருகிராமில் பாடகர் எல்விஷ் யாதவ் வீட்டின் மீது மர்ம நபர்கள் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். டெல்லி அருகே உள்ள குருகிராமை சேர்ந்தவர் எல்விஷ் யாதவ் (27). பாடகர், யூ டியூபர், தொழிலதிபர் என பன்முகத்தன்மை கொண்ட அவர் கடந்த 2023-ம் ஆண்டு இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் பரிசை வென்றார்.
அவரது யூ டியூப் சேனலில் 1.5 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் உள்ளனர். இதுவரை 13 இசை ஆல்பங்களை அவர் வெளியிட்டு உள்ளார். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார்.
யூ டியூப், இசை ஆல்பங்கள் மூலம் மிக குறுகிய காலத்தில் அவர் ரூ.50 கோடி வருவாய் ஈட்டி உள்ளார். சிஸ்டம் என்ற பெயரில் ஆடைகள் விற்பனை நிறுவனத்தையும், ஆன்லைன் விளையாட்டு தொடர்பான யூ டியூப் சேனலையும் அவர் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
டெல்லி குருகிராமின் ரயில் விகார் பகுதியில் எல்விஷ் யாதவின் வீடு உள்ளது. நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் எல்விஷ் யாதவின் வீட்டின் மீது இரு மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் வீட்டின் பால்கனி, சுவர், ஜன்னல்கள், கதவுகளில் குண்டுகள் துளைத்தன. அந்த நேரத்தில் எல்விஷ் யாதவ் வீட்டில் இல்லை.
அங்கிருந்த அவரது தாயாருக்கும் பணிப் பெண்ணுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தகவல் அறிந்து குருகிராம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்து ஏராளமான துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. வீடு முழுவதும் 12 இடங்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததற்கான தடயங்கள் உள்ளன.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: எல்விஷ் யாதவின் வீட்டின் மீது மர்ம நபர்கள் 30-க்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகளை சுட்டு உள்ளனர். அவற்றை கைப்பற்றி எந்த வகையான குண்டுகள் என்று ஆய்வு செய்து வருகிறோம். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளை தேடி வருகிறோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
பாவ் கேங் பொறுப்பேற்பு: எல்விஷ் யாதவ் வீட்டின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு ஹிமான்ஷு பாவ் தலைமையிலான பாவ் கேங் என்ற ரவுடி கும்பல் பொறுப்பேற்று உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு முதல் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொலை, ஆள்கடத்தல், மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட குற்றச் செயல்களில் பாவ் கேங் கும்பல் ஈடுபட்டு வருகிறது.