புது டெல்லி: டெல்லியில் ‘தீஜ் மேளா’ எனும் பெயரில் பெண்களுக்கான பிரம்மாண்டமான திருவிழா நடைபெறுகிறது. ஜுலை 25 முதல் 27 வரை நடைபெறும் இந்த விழாவை முதல்வர் ரேகா குப்தா துவக்கி வைக்கிறார்.
பெண்களுக்கான அதிகாரம், கலாச்சார வளம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் டெல்லி அரசு, தேசிய தலைநகரில் ஒரு பிரமாண்டமான தீஜ் மேளாவை ஏற்பாடு செய்கிறது.
இந்த விழா ஜூலை 25 முதல் 27 வரை பிதம்புராவில் உள்ள டெல்லி ஹாட்டில் நடைபெறுகிறது. இவ்விழாவை, வரும் ஜூலை 25-ம் தேதி மாலை முதல்வர் ரேகா குப்தா துவக்கி வைக்கிறார்.
பெண்களுக்காக முதல்முறையாக இந்த விழாவை டெல்லி அரசு நடத்துகிறது. இந்த விழாவில், பல்வேறு வகை பிரபல கலைஞர்களின் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
விழாவின் மூன்று நாட்களிலும், இந்த கண்காட்சி நாட்டுப்புற நடனங்கள், நாட்டுப்புற இசை, மேஜிக் நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளால் அலங்கரிக்கப்பட உள்ளன. இது, டெல்லி பெண்களுக்கான பண்டிகை நாட்கள் போன்ற உணர்வை ஏற்படுத்த உள்ளது.
இது குறித்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா கூறும்போது, ‘இந்த மேளா இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம், பெண்களின் வலிமை மற்றும் பாரம்பரிய கலைகளின் கொண்டாட்டமாக இருக்கும்.
ஒவ்வொரு தலைமுறைக்கும் சிறப்பு வாய்ந்த ஒன்றை டெல்லி அரசு வழங்க உள்ளது. இந்த வகையில், நடப்பு ஆண்டு தீஜ் மஹோத்சவம் டெல்லியில் நடைபெறகிறது. இவ்விழாவில் முழுவதும் பாரம்பரிய உற்சாகம், கலாச்சார கண்ணியம் மற்றும் பிரம்மாண்டத்துடன் 2025 தீஜ் மஹோத்சவம் அமையும்.
பெண்கள் அதிகாரமளித்தல், சுகாதாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தும் பட்டறைகள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் தீஜ் தொடர்பான கதை சொல்லும் அமர்வுகள் இடம்பெறும். இவை, கலாச்சார அறிவை வளப்படுத்துவதையும் மரபுகளை கடத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கும்’ எனத் தெரிவித்தார்.
இந்த தீஜ் மேளாவின் கருப்பொருளாக இந்தியப் பாரம்பரியம் இடம் பெறுகிறது. இதில் 3டி நுழைவு வாயில்கள், வண்ணமயமான சரவிளக்குகள், தொங்கும் விளக்குகள், எல்இடி மற்றும் ஸ்பாட் லைட்டிங் ஆகியவை இடம்பெறும்.
இதன்மூலம், விழாவுக்கானப் பார்வையாளர்கள் முழுமையான டிஜிட்டல் அனுபவத்தையும் அனுபவிக்கும்படி அமைக்கப்பட உள்ளன. செல்ஃபி அரங்குகள், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கூடிய மெஹந்தி வடிவமைப்பு தேர்வு ஆகியவையும் அமைகின்றன.
சுமார் 80 ஸ்டால்களுடன் கூடிய விழாவில், பாரம்பரிய கலைகள் மற்றும் கைவினைஞர்களின் படைப்புகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன. இத்துடன், அவற்றில் கைவினைப்பொருட்கள், இன உடைகள், வளையல்கள், பிளாக் பிரிண்டிங், எம்பிராய்டரி, மெஹந்தி மற்றும் பாரம்பரிய உணவுகள் இடம்பெறும்.
பெண்களின் பங்கேற்பை ஊக்குவிக்க பல்வேறு போட்டிகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகிறது. மெஹந்தி, ரங்கோலி, பிண்டி அலங்காரம், தீஜ் ராணி, தீஜ் வினாடி வினா மற்றும் எழுத்துப் போட்டிகள் போன்ற நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
பெண்களுக்கான விழா என்பதால், ஜூலை 18-ம் தேதி, ’பசுமையில் பெண்கள்’ என்ற அழகு நடைப்பயணம் நடத்தப்படுகிறது. இப்போட்டியில் வெல்லும் பெண்ணுக்கு ’மிஸ் தீஜ் 2025’ என்ற பட்டம் அளிக்கப்பட உள்ளது.