புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இமெயில் மூலம் இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
டெல்லியின் பிரபல பள்ளிகளான டிஏவி பப்ளிக் பள்ளி, ஃபெய்த் அகாடமி, டூன் பப்ளிக் பள்ளி, சர்வோதயா வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. Terrorizers 111 என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட அந்த நபர், 25,000 அமெரிக்க டாலர் நிதியை தர வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் பள்ளிகளுக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாணவர்கள் மற்றும் ஊழியர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். தேடுதல் நடவடிக்கைகள் தொடந்து நடைபெற்று வருகின்றன.” என்று டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது புதிதல்ல. கடந்த ஆண்டு மே மாதம் 300 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனைக்குப் பிறகு அவை போலி என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதேபோல், கடந்த திங்கள் கிழமையும் டெல்லியில் 32 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கடந்த மாதம் தொடர்ச்சியாக 3 நாட்களில் 8 பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பள்ளிகள் மட்டுமல்லாது, கல்லூரிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் அவை புரளி என உறுதிப்படுத்தப்பட்டது.