புதுடெல்லி: டெல்லியில் இன்று (ஜூலை 16) ஐந்து பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் டெல்லியில் 10 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று துவாரகாவில் உள்ள செயிண்ட் தாமஸ் பள்ளி, வசந்த்குஞ் பகுதியில் உள்ள வசந்த் வேலி பள்ளி, ஹவுஸ் காஸில் உள்ள மதர்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி, பஸ்சிம் விஹாரில் உள்ள ரிச்மண்ட் குளோபல் பள்ளி மற்றும் லோதி எஸ்டேட்டில் உள்ள சர்தார் படேல் வித்யாலயா ஆகிய பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் எச்சரிக்கையை தொடர்ந்து, இந்தப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, டெல்லி காவல்துறை மற்றும் வெடிகுண்டு அகற்றும் படையைச் சேர்ந்த பணியாளர்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டனர். மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு தீயணைப்பு வாகனங்களும் அனுப்பப்பட்டன.
மின்னஞ்சல் மூலம் செயிண்ட் தாமஸ் பள்ளி மற்றும் வசந்த் வேலி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் அந்தப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டனர். இதுவரை சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், விசாரணை நடந்து வருவதாகவும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
அதேபோல, செயிண்ட் ஸ்டீபன் கல்லூரிக்கும் இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. நூலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சலில் கூறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கல்லூரியில் வெடிகுண்டு அகற்றும் படை, மோப்பநாய் படை, தீயணைப்புப் படை வீரர்கள் முழுமையாக சோதனை நடத்தி வருகின்றனர்.