புதுடெல்லி: டெல்லியின் பிரகதி மைதானத்தில் 10-வது சர்வதேச போலீஸ் கண்காட்சி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன், மையமாக ‘மேக் இன் இந்தியா’ தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் போலீஸ் கண்காட்சி, சட்ட அமலாக்கம் மற்றும் தேசிய பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட அதிநவீன உள்நாட்டு தொழில்நுட்பங்கள் காட்சிப் பொருட்களாக உள்ளன. இக்கண்காட்சியில் 5,000-க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த இரண்டு நாள் நிகழ்வை, நெக்ஸ்ஜென் எக்ஸிபிஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஏற்பாடு செய்துள்ளது. 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தயாரிப்புகள் இடம் பெற்றுள்ளன. இதில், 3டி தடயவியல் மாதிரிகள், செயற்கை நுண்ணறிவில் (ஏஐ) இயங்கும் தரவு பகுப்பாய்வு, மேம்பட்ட ஆயுத அமைப்புகள், தன்னாட்சி பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவை உள்ளன.
குறிப்பாக, பொதுத்துறை நிறுவனமான எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெடில் (ஈசிஐஎல்) இடம்பெற்ற அரங்கு பலரையும் கவர்கிறது. தொழில்நுட்ப தன்னம்பிக்கைக்கான இந்தியாவின் உந்துதலை இது எடுத்துக்காட்டுகிறது.மேலும், அணுசக்தித் துறையின் கீழ் உள்ள பல்வேறு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தயாரிப்புகளை காட்சிப்படுத்துகிறது. இவற்றில், வாகனத்தில் பொருத்தப்பட்ட ஜாமர்கள், ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள், சிசிடிவிகள் மற்றும் எக்ஸ்ரே ஸ்கேனர்கள் ஆகியவைகளும் அடக்கம்.
இது குறித்து ஈசிஐஎல் பிரதிநிதி கூறுகையில், ‘இந்த தொழில்நுட்பங்கள் விஐபிக்கள் மற்றும் அரசு கட்டிடங்கள் முதல் விமான நிலையங்கள் போன்ற பொது இடங்கள் வரை தேசிய சொத்துகளைப் பாதுகாப்பதில் மிக முக்கியமானவை. ’எங்கள் தயாரிப்புகள் குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றம் மற்றும் பிரதமர் அலுவலகம் போன்ற முக்கிய இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன.’ எனத் தெரிவித்தார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த தீர்வுகள் அனைத்தும், இந்திய சட்ட அமலாக்கம் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு உற்பத்தியாளரான எஸ்எஸ்எஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளும் கவனம் ஈர்ப்பவை. இந்நிறுவனத்தின், கைத்துப்பாக்கிகள் முதல் ஸ்னைப்பர் ரைபிள்கள் வரை, மற்றும் மேம்பட்ட எதிர் ஆளில்லா விமான அமைப்புகளின் முழு அளவிலான உள்நாட்டு காலாட்படை ஆயுதங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வெளிநாட்டு ஆதரவு இல்லாமல் வடிவமைப்பு முதல் சான்றிதழ் வரை அனைத்தையும் கையாளும் இந்தியாவின் ஒரே தனியார் நிறுவனம் என எஸ்எஸ்எஸ் டிபென்ஸ் தன்னை குறிப்பிடுகிறது. இந்த சர்வதேச கண்காட்சியில் இடம்பெற்றவர்கள், கொள்முதல்களை ஒழுங்குபடுத்தவும், போலி ஈடுபாடுகள் உட்பட பொதுத்துறை நிறுவனங்களைப் போன்ற வாய்ப்புகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கவும் ஒரு பிரத்யேக பணிக்குழுவை நிறுவுமாறும் மத்திய அரசை வலியுறுத்துகின்றனர்