புதுடெல்லி: டெல்லியில் கடமை பாதை அருகே புதிதாக கட்டப்பட்ட மத்திய தலைமை செயலக கட்டிடம் ‘கர்தவ்யா பவன்-3’-யை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
தலைநகர் டெல்லியில் உள்ள பழமையான அரசு கட்டிடங்கள் எல்லாம். ‘சென்ட்ரல் விஸ்டா’ மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய கட்டிடங்களுக்கு மாற்றப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் தான் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டது.
டெல்லி ராய்சினா ஹில்ஸ் பகுதியில் நார்த் பிளாக் மற்றும் சவுத் பிளாக் பகுதியில் கடந்த 90 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மத்திய அமைச்சகங்கள் மற்றும் இதர துறை அலுவலகங்கள், சாஸ்திரி பவன், கிரிஷி பவன், உத்யோக் பவன் மற்றும் நிர்மன் பவன் போன்ற பழைய கட்டிடங்களில் செயல்பட்டு வந்த அலுவலகங்களை ஒரே இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
இதற்காக டெல்லி கடமை பாதை அருகே, மத்திய தலைமை செயலகத்தை ‘கர்தவ்யா பவன்’ என்ற பெயரில் 10 அடுக்குமாடி கட்டிடங்களை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் கட்டி வருகிறது. இந்த கட்டிடங்கள் தற்போதைய தேவைக்கு ஏற்ற வகையில் நவீன வடிவில் கட்டப்படுகின்றன. இதில் முடிவடைந்த நிலையில் உள்ள கர்தவ்யா பவன்-3 கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.
இந்த புதிய கட்டிடத்துக்கு மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை, ஊரக மேம்பாட்டுத் துறை, குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை, மத்தியப் பணியாளர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய அமைச்சகங்கள் மற்றும் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம் ஆகியவை மாறவுள்ளன.
வெளிப்படையான நிர்வாகம்: இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நாடு முழுவதும் கட்டமைப்புகளை புதுப்பிக்கும் தொலைநோக்குடன் மத்திய அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த 11 ஆண்டுகளில், வெளிப்படையான நிர்வாகத்தையும், மக்கள் நலன் சார்ந்த பணிகளையும் நாட்டு மக்கள் பார்த்துள்ளனர்.
சென்ட்ரல் விஸ்டா திட்டம் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகள் எல்லாம் நாட்டின் உலகளாவிய தொலைநோக்கை வெளிப்படுத்துகிறது. மத்திய அரசு அலுவலகங்கள் எல்லாம் ஆங்கிலேயர் காலத்து பழமையான கட்டிடங்களில், போதிய வசதியின்றி பல ஆண்டுகளாக இயங்கி வந்தன. அங்கு பணியாற்றுபவர்களின் நலனுக்காக கர்தவ்யா பவன்கள் கட்டப்படுகின்றன.
மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியாவின் வெற்றி கதையை எழுத நாம் இணைந்து பணியாற்ற வேண்டும். நாட்டின் உற்பத்தியை அதிகரிப்பதே நமது தீர்மானமாக இருக்க வேண்டும். நாட்டின் கனவுகளை நிறைவேற்றும் தீர்மானத்தை கர்தவ்யா பவன் வெளிப்படுத்துகிறது.
இது வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு வழிகாட்டும். இந்தியாவுடன் சுதந்திரம் பெற்ற நாடுகள் எல்லாம் வளர்ச்சியடைந்தபோது, இந்தியா மட்டும் முன்னேறாமல் இருந்தது ஏன் என்பது பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டிய நேரம் இது. தற்போதைய பிரச்சினைகளை நாம் எதிர்கால தலைமுறையினருக்கு விட்டு செல்லக் கூடாது என்பதுதான் நமது பொறுப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.