புதுடெல்லி: டெல்லியில் தெரு நாய்கள் பிரச்சினை வலுத்து வருவதற்கு முன்பே, மும்பையில் புறாக்களுக்கு உணவு அளிக்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்த இரு பெரும் நகரங்களில் தெருநாய்கள் மற்றும் புறாக்களின் வாழ்க்கை சிக்கலாகிவிட்டது.
டெல்லியில் தெரு நாய்கள் பிரச்சினை நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டது. அதிகரித்து வரும் நாய்க்கடி மற்றும் அதன் தாக்குதல் சம்பவங்கள் மக்களை கவலையடையச் செய்துள்ளன. உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்சினையை மிகவும் தீவிரமாகக் கருதி, தானாக முன் வந்து இந்த வழக்கை விசாரித்தது. தெரு நாய்களை டெல்லியிலிருந்து அகற்றி, காப்பகங்களில் அடைக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. இதையடுத்து, நாட்டின் தலைநகர் டெல்லியிலும், நிதித் தலைநகர் மும்பையிலும் நாய்கள் மற்றும் புறாக்கள் தொடர்பான சர்ச்சை சூடுபிடிக்கிறது.
டெல்லியில் தெரு நாய்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தது. அதேசமயம், மகராஷ்டிராவின் உயர் நீதிமன்றம் மும்பையில் புறாக்களுக்கு உணவளிப்பதைத் தடை செய்துள்ளது. இந்த இரு வழக்குகளின் உத்தரவுகள் மீது வரவேற்பு மற்றும் விமர்சனங்கள் தொடர்கின்றன.
தெரு நாய்கள் மீது கடந்த திங்கள்கிழமை வெளியான உச்சநீதிமன்றத் தீர்ப்பில், டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களின் (என்சிஆர்) தெருக்களை தெருநாய்கள் இல்லாததாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. தெருநாய்களை உடனடியாக அதற்கானக் காப்பகங்களில் மாற்றவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவில் நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி போடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவை சில விலங்கு உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் எதிர்த்துள்ளன. முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி இந்த முடிவை நடைமுறைக்கு முரணானதாகக் கூறியுள்ளார். டெல்லியில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட நாய்கள் இருப்பதாகவும், அவை அனைத்தையும் காப்பகங்களில் வைத்திருக்க ரூ.15,000 கோடி செலவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சனையில், காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தெரிவிக்கையில், ‘தெரு நாய்களுக்கு தங்குமிடங்கள், கருத்தடை, தடுப்பூசி மற்றும் சமூக பராமரிப்பு மட்டுமே தெருக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். ஆனால், திடீரென நாய்களை மொத்தமாக அகற்றும் நடவடிக்கை கொடூரமானது’ எனக் கவலை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள தெருநாய்கள் அனைத்தையும் 8 வாரங்களுக்குள் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து பரிசீலனை செய்வதாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உறுதியளித்துள்ளார்.
இதனிடையே, டெல்லியின் தெருநாய்களைப் போல், மும்பையில் புறாக்களுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மும்பை நகரின் 50-க்கும் அதிகமான பல முக்கிய இடங்களில் ஆயிரக்கணக்காகப் புறாக்கள் பல ஆண்டுகளாகக் கூடுகின்றன. பெரும்பாலும் சாலைகளின் சந்திப்புகளில் அவற்றுக்கு பொதுமக்கள் தாங்கள் கொண்டுவரும் தானியங்களை உணவாக அளிப்பது வழக்கம்.
மும்பையின் உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை 1-ல், புறாக்களுக்கு உணவு அளிப்பதில் ஒரு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதுதொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதிகளான ஜி.எஸ்.குல்கர்னி மற்றும் நீதிபதி ஆரிப் டாக்டர் தீர்ப்பளித்திருந்தனர். இதில், சுகாதாரக் கவலைகள் காரணமாக இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தனர்.
புறா எச்சங்கள் சுவாச நோய்களைப் பரப்புகின்றன. எனவே, பொது இடங்களில் புறாக்களுக்கு உணவளிக்காதபடி மூடி வைக்கவும், மும்பை மாநகராட்சிக்கு (பிஎம்சி) உத்தரவிட்டுள்ளனர். இதை மீறி, பொது இடங்களில் அவற்றுக்கு உணவளிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், புறாக்கள் கூடும் பொது இடங்கள் தார்பாய்களால் மூடப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், மும்பை யில் புறாக்களுக்கு உணவளிக்கும் பிரச்சினை இப்போது ஒரு மதம் மற்றும் சமூக சர்ச்சையாகவும் மாறி உள்ளது. மும்பை உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவை ஜைன சமூகமும், பறவை ஆர்வலர்களும் எதிர்க்கின்றனர்.
இந்த விவகாரத்தில் ஜைன சமூகத்தின் முக்கியத் தலைவரான ஜெயின் முனி நிலேஷ் சந்திர விஜய், “புறாக்களுக்கு உணவளிப்பது நம் ஜைன மதத்தின் ஒரு பகுதி. இந்த உத்தரவு, குரலற்ற பறவைகளுக்கு எதிரான கொடுமை. புறாக்களைக் காக்கத் தேவைப்பட்டால், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன். சிலர் ஆடுகளை பலியிடுகின்றனர். இது அவர்களின் மதம் சார்ந்தது. அதுபோல், நாங்கள் எங்கள் மதத்தின் கொள்கைகளைப் பின்பற்ற விரும்புகிறோம். மது மற்றும் போதைப்பொருட்களால் மக்கள் இறக்கின்றனர். இதற்காக, யாரும் கவலைப் படுவதில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.
புறாக்களுக்காக மற்றொரு வழக்கு: இதற்கும் முன்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இதை மும்பை நகரவாசிகளான பல்லவி பாட்டீல், ஸ்நேஹா விசாரியா மற்றும் சவீதா மஹாஜன் ஆகியோர் தொடுத்திருந்தனர். அதில் மனுதாரர்களான மூவரும், மும்பை நகரில் பாழடைந்தப் பழமையானக் கட்டிடங்களை இடித்துத் தள்ளக் கோரினர்.
இதற்கு, அக்கட்டிடங்களில் புறாக்கள் கூடுவது காரணம் என்றும் தெரிவித்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்து நிராகரித்தது. எனினும், பொதுமக்களால் புறாக்களுக்கு உணவு அளிப்பது நிறுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. மூடப்பட்ட தார்பாய்களின் அருகில் நின்று தானியங்களை உட்புறமாக வீசிச் செல்கின்றனர்.
கேள்விக்குறியாகப் புறாக்களின் வாழ்க்கை: இவர்களில் இதுவரை சுமார் 1000 பேர் மீது பிஎம்சி தலா ரூ.500 அபராதம் விதித்துள்ளது. மனிதர்கள் நேசிக்கும் ஜீவனாகப் புறா இருப்பதால் அபரதாத்தை பொதுமக்கள் பெரிதாகக் கருதவில்லை. இந்த நடவடிக்கை பிஎம்சியால் தீவிரமாக எடுக்கப்பட்டால், அந்த புறாக்களின் வாழ்க்கை என்னவாகும் என்பது கேள்விக் குறியாகிவிட்டது.
பிஎம்சி மனு: இந்நிலையில், புறாக்களுக்கு காலை 6.00 மணி முதல் 8.00 வரை மட்டும் உணவளிக்க கட்டுப்பாடுகள் விதிக்கலாம் எனக் கேட்டு பிஎம்சி சார்பில் ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது. புறாக்களுக்கு உணவளிப்பதில் அறிவியல் ரீதியான ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கவும் கேட்கப்பட்டுள்ளது. இதன் மீது மும்பை உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 20-ல் விசாரணை நடத்த உள்ளது.