புதுடெல்லி: டெல்லியில் பெய்த கனமழை காரணமாக நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. டெல்லியின் ஹரிநகர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் டெல்லி மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை மழை வெளுத்து வாங்கியது. இதனால் பஞ்ச்குயான் மார்க், மதுரா ரோடு, கன்னாட்பிளேஸ், ஆர்.கே.புரம், மோதி பாக், கித்வாய் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலையில் 15 விமானங்கள் தாமதாக தரையிறங்கின. இதுபோல் இங்கிருந்து 120 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன. கனமழையால் ரக்ஷா பந்தன் பண்டிகை நாளான நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லி ஜைதாபூர், ஹரிநகரில் கனமழை காரணமாக நேற்று காலையில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுப்டடனர். இதில் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 8 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் 2 சிறுமிகள், 2 பெண்கள் உள்ளிட்ட 8 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதுகுறித்து காவல் துணை ஆணையர் ஐஸ்வர்யா சர்மா கூறுகையில், “இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்துள்ளது. இப்பகுதியில் ஆபத்தான கட்டிடங்களில் வசித்து வந்த பலர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்” என்றார்.
இந்நிலையில் வடக்கு, மேற்கு, தெற்கு, தென்கிழக்கு மற்றும் மத்திய டெல்லி மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் நேற்று கன மழைக்கான ரெட் அலர்ட் விடுத்தது.