புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் சீலாம்பூர் பகுதியில் இன்று (ஜூலை 12) காலை சுமார் 7 மணி அளவில் நான்கு தலங்கள் கொண்டு அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் வகையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது சீலாம்பூர். இந்த பகுதியில் உள்ள ஜனதா மஸ்தூர் காலனியில் அமைந்துள்ள நான்கு தலங்கள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இன்று காலை இடிந்து விழுந்தது. இந்தத் தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படையினர், காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இதையடுத்து இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.
“இன்று காலை 7 மணி அளவில் கட்டிடம் இடிந்து விழுந்தது குறித்து எங்களுக்கு தகவல் வந்தது. தொடர்ந்து நாங்கள் இங்கு வந்தோம். மீட்புப் பணி நடந்து வருகிறது. கட்டிடத்தின் இடிபாடுகளில் இன்னும் சிலர் சிக்கியிருக்க வாய்ப்புள்ளது. பல்வேறு துறையினர் இணைந்து பணியாற்றி வருகிறோம்.” என மூத்த காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
“காலை 7 மணி அளவில் நான் என் வீட்டில் இருந்தபோது பலத்த சத்தம் கேட்டது. தொடர்ந்து எங்கு பார்த்தாலும் காற்றில் தூசு பறந்தது. பின்னர் நான் கீழே வந்து பார்த்தேன். அப்போது எங்களை வீட்டுக்கு அருகில் உள்ள வீடு ஒன்று இடிந்து விழுந்திருந்தது. இடிபாடுகளில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை. அந்த வீட்டில் 10 பேர் கொண்ட குடும்பம் வசித்து வந்தனர். மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர்” என அஸ்மா என்பவர் தெரிவித்துள்ளார்.
கட்டிடம் இடிந்து விழுந்தபோது அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் காலை நேர நடை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தான் சம்பவம் குறித்த தகவலை காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு முதலில் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினர் உடன் சேர்ந்து மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். இந்த கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.