புதுடெல்லி: முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவை அவரது தந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராதிகா யாதவ் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும், அவர் சுடப்பட்டபோது தாயும் அதே மாடியில் இருந்ததாகவும் வீட்டின் கீழ் பகுதியில் வசித்து வரும் உறவினர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் குருகிராம் நகரில் பெற்றோருடன் வசித்து வந்த முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவை (25 வயது), அவரது தந்தையே சுட்டுக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தான்தான் தனது மகளை சுட்டுக் கொன்றதாக தந்தை தீபக் யாதவ் (49) ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
ராதிகா யாதவ் கடந்த ஆண்டு ஒரு சுயாதீன கலைஞருடன் இசை வீடியோ ஒன்றில் இடம பெற்றுள்ளார். இந்த இசை வீடியோ வீட்டில் பதற்றத்தைத் தூண்டியிருக்கலாம் என்றும், இந்தக் கோணமும் விசாரிக்கப்படும் என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், அதே வீட்டின் கீழ் தளத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் ராதிகா யாதவின் தந்தை தீபக் யாதவின் சகோதரர் குல்தீப் யாதவ் காவல் நிலையத்தில் அளித்து புகாரில், “தீபக், அவரது மனைவி மஞ்சு மற்றும் மகள் ராதிகா ஆகியோர் வீட்டின் முதல் மாடியில் வசித்து வந்தனர். நான் எனது குடும்பத்தினருடன் தரை தளத்தில் வசித்து வருகிறேன். வியாழக்கிழமை, காலை 10.30 மணியளவில், திடீரென “பலத்த வெடி சத்தம்” கேட்டதை அடுத்து நான் முதல் மாடிக்குச் சென்றேன். அங்கு சென்றபோது, எனது சகோதரரின் மகள் ராதிகா சமையலறையில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்தேன். மேலும் ரிவால்வர் வரவேற்பறையில் கண்டெடுக்கப்பட்டது.
என் மகன் பியூஷ் யாதவும் முதல் மாடிக்கு விரைந்தார். நாங்கள் இருவரும் ராதிகாவை எங்கள் காரில் அழைத்துக்கொண்டு ஆசியா மரிங்கோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம், அங்கு மருத்துவர்கள் அவள் இறந்துவிட்டதாக அறிவித்தனர்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “ராதிகா ஒரு சிறந்த டென்னிஸ் வீராங்கனை, அவர் பல கோப்பைகளை வென்றிருந்தார். அவர் ஏன் கொலை செய்யப்பட்டார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. என் சகோதரனுக்கு உரிமம் பெற்ற 32 போர் ரிவால்வர் உள்ளது. அது அங்கே கிடந்தது. துப்பாக்கிச் சூடு நடந்தபோது ராதிகாவின் தாய் மஞ்சு யாதவ் வீட்டின் முதல் மாடியில் இருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குருகிராம் காவல் துறை செய்தித் தொடர்பாளர் சந்தீப் சிங், “ராதிகா முதல் மாடியில் சமையலறையில் உணவு சமைத்துக் கொண்டிருந்தபோது, மதியம் 2 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்தபோது தீபக், அவரது மனைவி மற்றும் மகள் மட்டுமே வீட்டின் முதல் மாடியில் இருந்துள்ளனர். சம்பவம் நடந்த நேரத்தில் அவர்களின் மகன் தீரஜ் அங்கு இல்லை
தீபக் குறைந்தது 5 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அவற்றில் மூன்று குண்டுகள் ராதிகாவின் பின்புறத்தில் பாய்ந்தன. இதையடுத்து, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தாயார் தரை தளத்தில் இருந்ததாக முன்னர் கூறப்பட்டது. கொலை நடந்தபோது ராதிகாவின் தாயார் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது உட்பட அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
ராதிகாவின் வருமானத்தில் குடும்பம் நடப்பதால், அதை சுட்டிக்காட்டி அடிக்கடி பலரும் தன்னை சிறுமைப்படுத்தியதால் மகளை சுட்டதாக அவரது தந்தை தனது வாக்குமுலத்தில் கூறியுள்ளார். ராதிகா ஒரு டென்னிஸ் அகாடமியை நடத்தி வந்தார். அவரது தந்தை அதை விரும்பவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
மகளின் வருமானத்தை நம்பி வாழ்வதாக சொந்த ஊர் மக்களால் பலமுறை கேலி செய்யப்பட்டதாக போலீஸாரிடம் தீபக் கூறியுள்ள நிலையில், அந்த வாக்குமூலத்தை அவரை நன்கு அறிந்த அவரது சொந்த ஊரான வஜிராபாத்தை சேர்ந்த ஒருவர் மறுத்துள்ளார். “குருகிராமில் தீபக்குக்கு பல சொத்துகள் உள்ளன. இவற்றின் மூலம் ரூ.15 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரை அவர் மாத வாடைகை பெற்று வருகிறார். அவருக்கு ஆடம்பர பண்ணை வீடும் உள்ளது.
தீபக் பணக்காரர் என்பது கிராமத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். இவ்வளவு பணம் இருக்கும் ஒருவரை கிராமத்தில் யார் கேலி செய்யப் போகிறார்கள்?
தீபக் தனது மகளை மிகவும் நேசித்தார். மகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள டென்னிஸ் ராக்கெட்டுகளை வாங்கிக் கொடுத்தார். எனவே இந்தக் கொலைக்கு பின்னால் தனிப்பட்ட காரணம் ஏதாவது இருக்கும்” என்று அவர் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார்.
இதனிடையே, டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரது தந்தையை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.