குருகிராம்: ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ். இவர் மாநில அளவிலான போட்டிகளில் விளையாடி வந்தார். குருகிராமின் சுஷாந்த் லோக் பகுதியில் இவர் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் வீ்ட்டில் ராதிகாவை அவரது தந்தை தீபக் யாதவ் (49) துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார்.
இதுகுறித்து குருகிராம் காவல் துறை செய்தித் தொடர்பாளர் சந்தீப் குமார் கூறுகையில், “விசாரணையில் மகளை சுட்டுக்கொன்றதாக தீபக் ஒப்புக்கொண்டுள்ளார். உரிமம் பெற்ற ஒரு துப்பாக்கியை கைப்பற்றியுள்ளோம். ராதிகா, டென்னிஸ் அகாடமி நடத்தி வருவதில் தீபக்கிற்கு உடன்பாடில்லை.
நாம் நல்ல நிலையில் இருப்பதால் அகாடமி நடத்த வேண்டிய அவசியமில்லை என்று மகளிடம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன” என்றார். இன்ஸ்டாகிராமில் ராதிகா ரீல்ஸ் வெளியிடுவதும் மியூசிக் வீடியோ ஒன்றில் தோன்றியதும் தீபக் யாதவுக்கு பிடிக்கவில்லை.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “கொலைக்கு அத்தகைய ஒரு காரணம் இருப்பதாக இதுவரை தெரியவரவில்லை’’ என்றனர். இந்நிலையில் தீபக் யாதவை குருகிராம் நீதிமன்றத்தில் போலீஸார் நேற்று ஆஜர்படுத்தினர். இதில் தீபக் யாதவை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
ராதிகா யாதவ் நேற்று முன்தினம் ராதிகா காலை உணவை தயார் செய்துகொண்டிருந்தபோது அவரை தீபக் தனது துப்பாக்கியால் 5 முறை சுட்டுள்ளார். இதில் 3 குண்டுகள் ராதிகாவின் முதுகில் பாய்ந்தன. பலமாத குடும்ப பிரச்சினையை தொடர்ந்து ராதிகா துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். மகளின் வருமானத்தை நம்பி வாழ்வதாக சொந்த ஊர் மக்களால் பலமுறை கேலி செய்யப்பட்டதாக போலீஸாரிடம் தீபக் கூறியுள்ளார்.
ஆனால் தீபக்கின் இந்த வாக்குமூலத்தை அவரை நன்கு அறிந்த அவரது சொந்த ஊரான வஜிராபாத்தை சேர்ந்த ஒருவர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “குருகிராமில் தீபக்கிற்கு பல சொத்துகள் உள்ளன. இவற்றின் மூலம் ரூ.15 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரை அவர் மாத வாடகை பெற்று வருகிறார்.
அவருக்கு ஆடம்பர பண்ணை வீடும் உள்ளது. அவர் பணக்காரர் என்பது கிராமத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். இவ்வளவு பணம் இருக்கும் ஒருவரை கிராமத்தில் யார் கேலி செய்யப் போகிறார்கள்? தீபக் தனது மகளை மிகவும் நேசித்தார்.
மகளின் டென்னிஸ் பயிற்சிக்காக தனது படிப்பை கைவிட்டுள்ளார். மகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள டென்னிஸ் ராக்கெட்டுகளை வாங்கிக் கொடுத்தார். எனவே இந்த கொலைக்கு பின்னால் தனிப்பட்ட காரணம் ஏதாவது இருக்கும். டென்னிஸ் அல்லது டென்னிஸ் அகாடமி காரணமாக இருக்காது’’ என்றார்.