புதுடெல்லி: பிஹார் மாநிலம் சிவான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மின்டா தேவி. வாக்காளர் பட்டியலில் இவர் 124 வயது மூதாட்டி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, வாக்கு திருட்டுக்கு ஆதாரமாக மின்டா தேவியின் வாக்காளர் அட்டையையும் வெளியிட்டு பேசினார்.
இந்நிலையில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை மீண்டும் கூறி நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மின்டா தேவியின் புகைப்படம், பெயர் அச்சிடப்பட்ட ‘டி ஷர்ட்’டை அணிந்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கவுரவ் கோகய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தனியார் செய்தி சேனலிடம் மின்டா தேவி கூறியதாவது: என் புகைப்படம், பெயரை டி ஷர்ட்டில் பயன்படுத்த அவர்களுக்கு அதிகாரம் அளித்தது யார்? அவர்கள் யார்? எனக்கு ராகுல் காந்தியும் பிரியங்காவும் எனக்கு என்ன உறவு?
என்னுடைய வாக்காளர் அட்டையில் முரண்பாடுகள் உள்ளது. அதை சரி செய்ய கூறிவருகிறேன். என் மீது அக்கறை உள்ளவர்கள் போல் காங்கிரஸ் கட்சி செயல்படுவது ஏன்? காங்கிரஸ் கட்சியினர் அப்படி செய்ய கூடாது. எனக்கு அது தேவையில்லை. இவ்வாறு மின்டா தேவி கோபத்துடன் கூறினார்.