புதுடெல்லி: தமிழ் ஓலைச் சுவடிகளை எவ்வாறு படிப்பது, புரிந்துகொள்வது என்பதன் விதிமுறைகள் கற்பித்து வரும் தஞ்சை மணிமாறனின் உத்வேகத்தால் உதித்ததுதான் ‘ஞான பாரத இயக்கம்’ திட்டம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியின் 124-வது அத்தியாயத்தில் பிரதமர் மோடி விவரிக்கும்போது, “பாரதத்தின் கலாச்சாரத்தின் மிகப் பெரிய ஆதாரம், நமது பண்டிகைகளும், நமது பாரம்பரியங்களும் தான். ஆனால் நமது கலாச்சாரத்தின் உயிர்ப்புத்தன்மையுடைய மேலும் ஒரு பக்கம் இருக்கிறது. நமது நிகழ்காலம் மற்றும் நமது வரலாற்றை நாம் ஆவணப்படுத்திக்க் கொண்டே வரவேண்டும் என்பதுதான் அந்தப் பக்கம்.
பல நூற்றாண்டுகளாக ஓலைச்சுவடிகள் வடிவிலே பாதுகாக்கப்பட்டிருக்கும் ஞானம்தான் நமது மெய்யான சக்தியாகும். இந்த ஓலைச்சுவடிகளிலே விஞ்ஞானம் உள்ளது, சிகிச்சை முறைகள் இருக்கின்றன, இசை இருக்கிறது, தத்துவம் உள்ளது, அனைத்திலும் முக்கியமான விஷயம் என்னவென்றால், மனித சமூகத்தின் எதிர்காலத்தை எப்படி ஒளிமயமானதாக ஆக்கமுடியும் என்பதைப் பற்றிய சிந்தனைதான் அது.
இப்படிப்பட்ட அசாதாரணமான ஞானத்தை, இந்த மரபினைப் போற்றிப் பாதுகாப்பதுதான் நமது மிகப்பெரிய பொறுப்பாகும். நமது தேசத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும், தங்களுடைய சாதனையாகவே ஆக்கியவர்கள் இருந்து வந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட கருத்தூக்கம் அளிக்கும் ஆளுமைகளில் ஒருவர் தான் தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த மணிமாறன்.
இன்றைய தலைமுறையினர் தமிழில் இருக்கும் ஓலைச்சுவடிகளைப் படிக்க கற்றுக் கொள்ளவில்லை என்றால், வருங்காலத் தலைமுறையினரின் காலத்தில் இந்த விலைமதிப்பில்லாத மரபுச் செல்வத்தை நாம் இழக்க நேரிடும் என்று மணிமாறன் கருதினார். ஆகையால் அவர் மாலைநேர வகுப்புகளைத் தொடங்கினார். அதிலே மாணவர்கள், வேலைபார்க்கும் இளைஞர்கள், ஆய்வாளர்கள் என பலர் அங்கே கற்கத் தொடங்கினார்கள்.
மணிமாறன் தமிழ்ச் சுவடிகளை எவ்வாறு படிப்பது, புரிந்துகொள்வது என்பதன் விதிமுறைகள் பற்றிக் கற்பித்தார். இன்று பல முயற்சிகளுக்குப் பிறகு பல மாணவர்கள் இந்த வழிமுறையில் தேர்ச்சி பெற்று விட்டார்கள். சில மாணவர்கள், இந்தச் சுவடிகளின் அடிப்படையில் பாரம்பரிய மருத்துவமுறை மீதான ஆய்வுகளையும் மேற்கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட முயற்சிகள் நாடெங்கிலும் நடைபெற்றால், நமது பண்டைய ஞானம் நான்கு சுவர்களுக்குள்ளே மட்டும் அடைந்து கிடக்காமல், புதிய தலைமுறையினருக்கு விழிப்பேற்படுத்தும் பணியை ஆற்றும் இல்லையா?
இந்த எண்ணத்தால் உத்வேகம் அடைந்து, இந்திய அரசு, இந்த ஆண்டு வரவு செலவுத் திட்ட அறிக்கையில், ‘ஞான பாரத இயக்கம்’ என்ற ஒரு வரலாற்று முன்னெடுப்பை அறிவித்திருக்கிறது. இந்த இயக்கத்தின்படி, பண்டைய சுவடிகள் டிஜிட்டல்மயமாக்கப்படும். பிறகு ஒரு தேசிய டிஜிட்டல் சேமிப்பகம் உருவாக்கப்பட்டு, உலகெங்கிலுமிருந்தும் மாணவர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் பாரதத்தின் ஞானப் பாரம்பரியத்தோடு தங்களை இணைத்துக் கொள்ள இயலும்.
நீங்களும் இப்படிப்பட்ட முயற்சியோடு இணைந்திருந்தாலோ, இணைய விரும்பினாலோ, மைகவ் அல்லது கலாச்சார அமைச்சகத்தைக் கண்டிப்பாகத் தொடர்பு கொள்ளுங்கள்; ஏனென்றால் இவை சுவடிகள் மட்டுமல்ல, இவை இனிவரும் சந்ததிகளும் தெரிந்து கொள்ள வேண்டிய பாரதத்தின் ஆன்மாவின் அத்தியாயங்கள்” என்றார் பிரதமர் மோடி.