புதுடெல்லி: “இந்த நாட்டின் இளைஞர்கள், நாட்டிலுள்ள மாணவர்கள், ஜென் ஸீ தலைமுறையினர் அரசமைப்பை, ஜனநாயகத்தை பாதுகாப்பார்கள். வாக்குத் திருட்டை தடுப்பார்கள். அவர்களுடன் நான் துணை இருப்பேன்.” என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ள நிலையில், ராகுல் காந்தியும் அவர் சார்ந்த காங்கிரஸுன் நேபாளத்தில் நடந்தது போன்ற ஒரு வன்முறைப் போராட்டத்தை தூண்டுவதாக பாஜக விமர்சித்துள்ளது.
முன்னதாக நேற்று டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, “ ‘வாக்கு திருட்டு 2.0’ தகவலை தற்போது ஆதாரத்துடன் வெளியிடுகிறேன். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி செல்வாக்காக இருக்கும் பகுதிகளில் லட்சக்கணக்கான வாக்காளர்களை ஆன்லைன் மூலம் நீக்கும் மோசடியை ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்படுத்துகிறது. இந்த மோசடிகள் ஆன்லைனில் நடத்தப்படுகிறது.
கர்நாடகா, மகாராஷ்டிரா, பிஹார், ஹரியானா, உத்தர பிரதேசத்தில் இதே முறையில் வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்துள்ளது. இதன் பின்னணியில் உள்ளவர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாக்கிறார்” என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து இன்று தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி பகிர்ந்த பதிவில், “காலை 4 மணிக்கு எழுந்திருங்கள், 36 வினாடிகளில் 2 வாக்காளர்களை நீக்குங்கள், பின்னர் மீண்டும் தூங்கச் செல்லுங்கள். வாக்கு திருட்டு இப்படித்தான் நடந்தது.
இந்த சம்பவங்களின்போது தேர்தல் ஆணையம் விழித்திருந்தது, இந்த வாக்கு திருட்டைப் பார்த்துக் கொண்டே இருந்தது, திருடர்களைப் பாதுகாத்துக்கொண்டே இருந்தது. வாக்கு திருடர்களின் பாதுகாவலராக தேர்தல் ஆணையம் உள்ளது.
இந்த நாட்டின் இளைஞர்கள், நாட்டிலுள்ள மாணவர்கள், ஜென் ஸீ தலைமுறையினர் அரசமைபை, ஜனநாயகத்தை பாதுகாப்பார்கள். வாக்குத் திருட்டை தடுப்பார்கள். அவர்களுடன் நான் துணை இருப்பேன்.” என்று பதிவிட்டிருந்தார். இளைஞர்கள், மாணவர்கள், ஜென் ஸீ-க்கள் என்றே அவர் தனது ட்வீட்டை தொடங்கியிருந்தார். இதுதான் தற்போது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே எதிர்வினை: இதற்கு எதிர்வினையாற்றியுள்ள பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே, “ஜென் ஸீ தலைமுறையினர் எப்போதுமே குடும்ப அரசியல், ஊழல் மற்றும் சித்தாந்த தெளிவின்மைக்கு எதிராகத்தான் இருக்கின்றனர்.
அவ்வாறாக வாரிசு அரசியலுக்கு எதிராக இருக்கும் ஜென் ஸீ தலைமுறையினர் எதற்காக நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா வழியில் அரசியலுக்கு வந்த ராகுல் காந்தியை ஆதரிக்கப் போகிறார்கள். அவர்கள் ஊழலுக்கு எதிரானவர்கள். அவர்கள் உங்களைத்தான் அப்புறப்படுத்துவார்கள்.
ஜென் ஸீ தலைமுறையினர் வெகுண்டெழுந்தால், ராகுல் காந்தி இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். ஜென் ஸீக்கள் வங்கதேசத்தில் இஸ்லாமிய ஆட்சியை, நேபாளத்தில் இந்து ஆட்சியை விரும்பினர். இந்தியாவை இந்து தேசமாக ஏன் அவர்கள் முன்வரமாட்டார்கள்?. ராகுல் காந்தி இனி இந்தத் தேசத்தைவிட்டு வெளியேற தயாராகிக் கொள்ளலாம்.” என்று கூறியுள்ளார்.
அதேபோல், நேற்று ராகுல் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய அனுராக் தாக்குரும், “தேர்தல் ஆணையம் நடுநிலையாக இயங்கும் வேளையில், ராகுல் காந்தி ஜனநாயகத்தை சிதைக்க முயற்சிக்கிறார். அவர் குடிமக்களை தவறான வழியில் நடத்துகிறார். வங்கதேசம், நேபாள பாணியில் வன்முறையை தூண்ட முயற்சிக்கிறார்.” என்று விமர்சித்திருந்தது நினைவுகூரத்தக்கது.