புதுடெல்லி: ‘ஜெகதீப் தன்கர் எங்கே?’ என்ற கேள்வி, குடியரசு துணைத் தலைவர் தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில் வலுவாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கேள்வி கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக ஏற்படுத்தி வரும் அதிர்வலைகள் குறித்து பார்ப்போம்.
மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் அனல் பறப்பது இயல்பானது. ஆனால், முதன்முறையாக குடியரசு துணைத் தலைவர் தேர்தல் பரபரப்புகளுடன் நடக்கப்போவது இதுவே முதன்முறை என்று சொல்லும் அளவுக்கு, அதன் பின்னணியில் அத்தனை கேள்விகள், சூட்சமங்கள் சூழ்ந்து கொண்டுள்ளன.
ஜெகதீப் தன்கர், கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார். அவரது ஐந்தாண்டு பதவிக் காலம் 2027, ஆகஸ்ட் 10-ம் தேதி நிறைவடைய இருந்தது. இந்நிலையில், தன்கர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
‘‘உடல்நலனுக்கு முன்னுரிமை அளித்தும் மருத்துவ ஆலோசனைக்கு கட்டுப்பட்டும் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 67(ஏ) பிரிவின் கீழ் குடியரசு துணைத் தலைவர் பதவியை நான் உடனடியாக ராஜினாமா செய்கிறேன்’’ என்று அவர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அவரது ராஜினாமா கடிதம் மின்னல் வேகத்தில் ஏற்கப்பட்டது. பிரதமர் ஜெட் வேகத்தில், தன்கருக்கு ஓய்வுக்கால வாழ்த்துகளை பதிவு செய்தார்.
அவரது திடீர் ராஜினாமாவும், அது ஏற்கப்பட்ட வேகமும், பிரதமரின் ஃபேர்வெல் மெசேஜும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது ராஜினாமா பின்னணியில் அரசியல் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அணிவகுத்து குற்றம்சாட்டின. அந்தக் குற்றச்சாட்டு பரபரப்புகள் ஓயும் வேளையில் அதைவிட பரபரப்பானது ஜெகதீப் தன்கர் திடீரென பொதுவெளியில் இருந்து ‘மாயமானது’. ஆம், ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்த பின்னர் நாடாளுமன்றம் வரை அந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தன்கர் எங்கிருக்கிறார், எப்படியிருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை.
ஜெகதீப் தன்கர் ராஜினாமாவுக்குப் பின்னர் அவர் பொதுவெளியில் எங்கும் தோன்றவில்லை. அவரது குடும்பத்தினரோ, அவருடைய அலுவலக அதிகாரிகளோ அவரது இருப்பிடம் பற்றி இன்னும் எதுவும் உறுதிபட எதுவும் கூறவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்விகளைத் தொடுத்து வருகின்றன.
இந்த நிலையில்தான் மூத்த அரசியல்வாதியும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல், “நான் ‘லாபட்டா லேடீஸ்’ என்ற திரைப்படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் ‘லாபட்டா குடியரசு துணைத் தலைவர்’ என்று இதுவரை கேள்விப்படவில்லை” என்று குறிப்பிட்டு, தன்கரின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு குறித்த கவலைகளைத் தணிக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவரது இருப்பிடம் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.
அவரைத் தொடர்ந்து சிவ சேனா உத்தவ் தாக்கரே பிரிவு எம்.பி. சஞ்சய் ராவத், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில், “ஜெகதீப் தன்கர் எங்கே? அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவுகின்றன. அவருடைய அலுவலக அதிகாரிகளையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருடைய நலன் பற்றியும், இருப்பிடம் பற்றியும் தகவல்களை அறிந்து கொள்ள இந்த தேசம் விரும்புகிறது” என்று கூறியிருந்தார். மேலும், மாநிலங்களவை உறுப்பினர்கள் தன்கர் பற்றி கவலைப்படுவதால், தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தொடர்வேன் என்றும் கூறினார்.
180 டிகிரி வித்தியாசம்: இத்தகையச் சூழலில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிப்பும் வந்தது. பாஜக சார்பில் யாரும் சற்றும் கணிக்காத தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னர் தன்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கும் இப்போது சிபிஆர் அறிவிக்கப்பட்டதற்கும் இடையே 180 டிகிரி வித்தியாசம் என்று கூறலாம். சிபிஆர், ஒரு ஜன சங்க உருவாக்கம். அதை சுட்டிக்காட்டித்தான் எதிர்க்கட்சிகள் அவரை வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆர்எஸ்எஸ் முகத்தையும் தாண்டி பேன் சவுத் இந்தியா உத்தி வகுப்பாளராக பாஜகவால் அறியப்படுவதால் அவரை பாஜக பல்வேறு கணக்குகளுடன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளது.
தன்கர் 2022-ல் ஜாட் சமூகத்தினரை சமாதானப்படுத்துவதற்காக குடியரசு துணைத் தலைவர் பதவியில் அமர்த்தப்பட்டார் என்ற தகவல்களும் உண்டு. ஜாட் சமூகத்தினர், டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவின் முக்கியமான சமூகத்தினர். வேளாண் பின்னணி கொண்டவர்கள். டெல்லியில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஊடே தான் தன்கர் குடியரசு துணைத் தலைவரானார். ஜாட் சமூகத்தின தேசிய அதிகார மையத்தில் முக்கியமானவர்கள், அவர்கள் குரலுக்கு வலிமை உண்டு என்பதுபோல் அவருக்கு பதவி வழங்கப்பட்டது.
இப்போது ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் ஓபிசி முகத்துக்கு முக்கியத்துவம் அளித்தல், கர்நாடகாவைத் தவிர்த்து தென்னிந்தியாவில் பாஜகவை வலுப்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்கள் உள்ளன. அதையும் தாண்டி தன்கரின் தலையீடுகள் சித்தாந்த ரீதியாக பாஜகவுக்கு தலைவலியாக இருந்த நிலயில் சிபிஆரால் அந்த சர்ச்சைகள் உருவாகாத என்ற கவனமாக தேர்வு செய்துள்ளது பாஜக.
பாஜக எதையெல்லாம் தனக்கு ஆதாயமாகக் கருதுகிறதோ அதை எல்லாம், அவையை நடுநிலையாக நடத்துவதற்கு எதிரானது எனக் கூறுகின்றன எதிர்க்கட்சிகள். மேலும், இண்டியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர், ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், குவஹாட்டி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்துள்ளார்.
ஆதரவு கேட்கும் பாஜக; ஆவேசமடைந்த எம்.பி. – இந்தச் சூழலில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலினிடம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்தார். அவரைத் தொடர்ந்து அதே கோரிக்கையை, எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்துள்ளார்.
இதற்கிடையில், மர்ம தேசத்து மனிதர்கள் என்ற தலைப்பில் சு.வெங்கடேசன் எம்.பி, “ஏற்கனவே குடியரசு துணைத் தலைவராக இருந்தவர் திடீரென ராஜினாமா செய்தார். அதன் பிறகு அவர் பற்றிய எந்த விவரமும் கிடைக்கவில்லை. அவரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரும் பாஜகவை சேர்ந்தவர்தான். அக்கட்சியால்தான் அந்நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார். அவ்வளவு பெரிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து பகல் 2 மணிக்கு புறப்பட்டுப் போனவர் என்னவானார் என்று இதுவரை நாட்டுக்குத் தெரியவில்லை.
இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை வரவேற்க டெல்லி விமான நிலையத்திற்கு நான்கு ஒன்றிய அமைச்சர்கள் சென்றுள்ளனர். ராஜினாமா செய்த தன்கரை அனுப்பிவைக்கப் போனது எத்தனை ஒன்றிய அமைச்சர்கள்? எங்கே அனுப்பிவைத்தீர்கள்? அதே இடத்திற்கு புதியவரையும் அனுப்பிவைக்க மாட்டோம் என்று குறைந்தபட்சம் அவரிடமாவது சொன்னீர்களா?
பல லட்சம் வாக்காளர்களோடு சேர்த்து குடியரசு துணைத் தலைவரையும் கண்டறியும் பொறுப்பு எதிர்கட்சிக்கு மட்டுமே உரியதாகிறது. ஆளையே காணோம் என்ற பதற்றத்தில் நாடு இருக்க இதில் கூசாமல் ஆதரவு கேட்கிறது ஒரு கூட்டம்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தக் கேள்விகள் ஒருபுறம் இருக்க ஜெகதீப் தன்கர் நன்றாகவே இருக்கிறார். அவரது இல்லத்தில்தான் இருக்கிறார். ஆனால், ஊடக வெளிச்சத்தைத் தவிர்த்து வருகிறார் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
மர்மம் விலகுமா? ஆனால், ஜூலை 21-ம் தேதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததை ஒட்டி, அன்றைய தினம் 4 மணி நேரத்தில் நடந்தது என்ன? ராஜினாமாவுக்கு அழுத்தம் ஏற்பட்டதா? அவமானப்படுத்தப்பட்டாரா? வேறு அரசியல் கணக்குகள் போட்டு அவர் பதவி பறிக்கப்பட்டதா? இல்லை, தன்னால் அரசுக்கு ஏற்பட்ட தர்மசங்கடங்கள் விளைவாக மூத்த அமைச்சர்கள் அணி திரண்டு தன்னை நீக்க முயற்சிக்கும் முன்னர் நாமே விலகிவிடுவோம் என்று ‘டேமேஜ் கன்ட்ரோல்’ ஆக ராஜினாமா செய்தாரா என்று எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்னும் விடையில்லை. குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்குப் பின்னர் தன்கர் இயல்பாக வெளியில் வந்தால், பல சந்தேகங்கள் முற்றுப்பெறுவதோடு, சில கேள்விகளுக்கும் விடை கிடைக்கலாம்.