இந்திய குடியரசு துணைத் தலைவர் ஒருவர் தனது பதவிக் காலம் முடிவதற்கு முன்னதாகவே ராஜினாமா செய்திருப்பது நாட்டின் வரலாற்றில் முதன்முறை என்பதால் மட்டுமல்ல, வழக்கம்போல் அலுவலுக்கு வந்தவர், அவரது வழக்கமான இயல்பில் எந்த மாற்றத்தையும் முகத்திலும், உடல்மொழியிலும் சிறு அறிகுறிகளைக் கூட கடத்தாதவர் ராஜினாமா செய்தது ஏன்? 4 மணி நேர இடைவெளியில் நடந்தது என்ன? என்று ஊகங்களை விட்டுவிட்டுச் சென்றதும் இந்திய அரசியலில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த வேகத்திலேயே, அவருடைய ராஜினாமா ஏற்கப்படுகிறது. பிரதமரும் ஜெகதீப் தன்கருக்கு வாழ்த்துரை சொல்லிவிடுகிறார். இந்த ‘வேகம்’, ஒரு விவாத மூட்டையாக நாடு முழுவதும் குறுக்கும், நெடுக்குமாக உருண்டு கொண்டிருக்கிறது.
4 மணி நேரத்தில் நடந்தது என்ன? ராஜினாமாவுக்கு அழுத்தம் ஏற்பட்டதா? அவமானப்படுத்தப்பட்டாரா? வேறு அரசியல் கணக்குகள் போட்டு அவர் பதவி பறிக்கப்பட்டதா? இல்லை, தன்னால் அரசுக்கு ஏற்பட்ட தர்மசங்கடங்கள் விளைவாக மூத்த அமைச்சர்கள் அணி திரண்டு தன்னை நீக்க முயற்சிக்கும் முன்னர் நாமே விலகிவிடுவோம் என்று ‘டேமேஜ் கன்ட்ரோல்’ ஆக ராஜினாமா செய்தாரா? – இப்படி எல்லாம் கருதுகோள்கள் கற்பிக்கப்படுகின்றன.
‘உடல்நிலை’ எனக் குறிப்பிட்ட ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமாவுக்கு இதுதான் காரணம் என்று அதிகாரபூர்வமாக எதுவும் நிறுவப்படாவிட்டாலும் கூட, அப்பட்டமாகத் தெரியும் சில காரணிகளை விவாதிக்காமல் கடந்து சென்றுவிட முடியாது. அவற்றில் சிலவற்றை பரிசீலிப்போம்.
1. ஜெகதீப் தன்கர் திடீர் பதவி விலகலுக்கு, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த, கட்டுக்கட்டான பணம் பறிமுதல் விவகாரத்தில் சிக்கிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான தகுதி நீக்க தீர்மானத்தை அவர் ஏற்றுக்கொண்டதன் பின்னணியில் ஏற்பட்ட சலசலப்புகளே பிரதானக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்தக் காரணத்தை சுருக்கமாக அலசுவோம். நடப்பு மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 21) காலை தொடங்கியது. அன்று பிற்பகல் 1 மணியளவில், தன்கர் மாநிலங்களவையின் அலுவல் ஆலோசனைக் குழு கூட்டத்தைக் கூட்டினார். கூட்டத்தின் தொடர்ச்சி மாலை 4.30 மணிக்கு நடக்கும் என்று தன்கர் அறிவித்தார்.
இந்த இடைப்பட்ட நேரத்தில், கிட்டத்தட்ட பிற்பகல் 3 மணியளவில், மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க தீர்மானத்துக்கான நோட்டீஸை தன்கரிடம் சமர்ப்பித்துள்ளனர். இதனை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்க பதிவின் மூலம் உறுதிப்படுத்தியிருந்தார். “எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 63 மாநிலங்களவை உறுப்பினர்கள் கையெழுத்திட்ட தகுதி நீக்க தீர்மானத்துகான நோட்டீஸ், தன்கரிடம் சமர்ப்பிக்கப்பட்டது” என்று அவர் பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, 4 மணியளவில் மாநிலங்களவைக்கு வந்த தன்கர், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் பெறப்பட்டதாக அறிவித்தார். அது மட்டுமல்லாது, இதேபோல் ஒரு நோட்டீஸ் மக்களவையிலும் பெறப்பட்டால் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மாநிலங்களவைத் தலைவரும், மக்களவை சபாநாயகரும் இணைந்து ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார்.
அதே நேரத்தில் மக்களவையில் தீர்மானத்தைக் கொண்டுவர அரசு முயன்று கொண்டிருக்க, மாநிலங்களவையில் ஜெகதீப் தன்கரின் இந்த அறிவிப்பு சற்றும் எதிர்பாராத அதிர்ச்சியாக இறங்கியது. ஊழல் ஒழிப்பு இயந்திரம் என்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முகத்தை முன்னிறுத்தும் முயற்சி தடைபட்டதாக அரசு கருதியது.
பெரும்பாலும் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே வெளிப்படுத்திய தன்கரின் இந்த திடீர் செயல்பாடு அரசுக்கு, மூத்த அமைச்சர்களுக்கு திகைப்பைத் தந்தது. கூடவே, மாநிலங்களவைத் தலைவர் அலுவலக அதிகாரிகளுக்கும் அரசுத் தரப்புக்கும் இடையே சூடான விவாதங்களுக்கும் வித்திட்டது.
இந்தச் சூழ்நிலையில் மீண்டும் 4.30 மணியளவில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தை தன்கர் கூட்ட, அதில் சபை முன்னவர் நட்டா, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ரிஜிஜு பங்கேற்கவில்லை. ஆனாலும், தன்கர் கூட்டத்தை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து இரவு 9.25 மணிக்கு தன்கர் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தார்.
இதைச் சுட்டிக்காட்டித்தான் பகல் 1 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை நடந்தது என்ன என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி வருகிறது. இந்த நிகழ்வுகளின் அடிப்படையில் ஜெகதீப் தன்கர் ராஜினாமா பின்னணியில் அரசு அழுத்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
2. இது ஒருபுறம் இருக்க, ஜெகதீப் தன்கர் நீதித் துறை மீதான விமர்சனங்களை அடிக்கடி கட்டவிழ்த்தது அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதுவும் குறிப்பாக, தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்துக்கு ஆதரவாக அவர் பேசியது கவனிக்கத்தக்கது. கடந்த டிசம்பரில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய தன்கர், “தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதுபோன்ற ஒரு நிகழ்வு உலகிற்கு புதிது” என்று கூறியிருந்தார். இவ்வாறாக அவர் வெளிப்படையாகப் பேசியது அவர் அரசின் செய்தித் தொடர்பாளர் போல் இருப்பதாக விமர்சனங்களை எழுப்பியது.
கடந்த டிசம்பரில், தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டுவந்தது. அரசியலமைப்பு சட்டம் பிரிவு 67(பி)-ன் கீழ் கொண்டுவரப்பட்ட அந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு சமாஜ்வாதி கட்சி, திரிணமூல் காங்கிரஸ் கட்சி மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. இந்த தீர்மானத்தினால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. சுதந்திர இந்திய வரலாற்றில் மாநிலங்களவைத் தலைவருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது அதுவே முதல் முறை. தன்கர் அவையை பாரபட்சத்துடன் நடத்துவதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் கார்கே குற்றம் சாட்டியிருந்த நிலையில், அந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
ஆனால், தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானம் அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அதனை நிராகரித்தார். இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது மத்திய பாஜக அரசு தனக்காக போதுமான அளவு நிற்கவில்லை என்ற மனத்தாங்கல் தன்கருக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இவையெல்லாம் இணைந்து, அவர் தான் அவமானப்படுத்தப்பட்டு விட்டதாக உணரச் செய்யவே, அதுவே அவர் ஜூலை 21 நிகழ்வுகளைத் தொடர்ந்து ராஜினாமா செய்யத் தூண்டியது என்றும் கூறப்படுகிறது.
3. பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அடுத்த குடியரசு துணைத் தலைவராக நியமிக்கப்பட இருப்பதாகவும் அதன் காரணமாகவே ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பிஹார் தேர்தலில் பாஜக கூடுதல் இடங்களைக் குறிவைக்கிறது. அப்படியிருக்க நிதிஷ் குமாரை திருப்திப்படுத்த, சமாதானப்படுத்த, சரிகட்ட அவருக்கு குடியரசு துணைத் தலைவர் பதவியை வழங்குவது சரியான தீர்வாக இருக்கும் என்ற அடிப்படையில் ஜெகதீப் தன்கர் விலகல் நிர்பந்திக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் டெல்லியில் ஜவர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய தன்கர், “தெய்வீகக் குறுக்கீடுகள் (அதாவது மரணம்) இல்லாவிட்டால் நான் 2027 ஆகஸ்ட் வரை இந்தப் பதவியில் இருப்பேன்” என்று பேசியிருந்தார். அப்படிப் பேசியவர் உடல்நிலையைக் காரணம் காட்டி எதிர்பாராமல் ராஜினாமா செய்து, வரலாற்றுப் பக்கங்களில் ஒரு முக்கிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறார்.
இவையெல்லாம் தான் ஜெகதீப் தன்கர் ராஜினாமாவைச் சுற்றி விடை தெரியாத கேள்விகளைக் கட்டமைத்துள்ளன. இந்தக் கேள்விகளோடு காங்கிரஸ் எம்.பி. சுக்தியோ பகத்தின் ஒரு கருத்தையும் நாம் கவனத்தில் கொள்ளலாம். அது: “அரசியலில் எதுவும் நேரடியாக நடப்பதில்லை” என்று ஜெகதீப் தன்கர் ராஜினாமா குறித்து அவர் கூறிய கருத்து!