புதுடெல்லி: மாநில அமைச்சர்கள் குழு கூட்டம் டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இதில் 2-அடுக்கு ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் தொடர்பாக அமைச்சர்கள் குழுவுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாட உள்ளார். ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் தற்போது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக உள்ளது.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு நற்செய்தியாக தீபாவளிக்குள் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி கணிசமாக குறைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதாவது குறைந்த பட்சம் 5 சதவீதம், அதிகபட்சம் 18 சதவீதம் கொண்ட இரு அடுக்குகளாக ஜிஎஸ்டி வரியை சீர்திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்படி, தற்போது 12 சதவீத வரி விதிப்பில் உள்ள பொருட்கள் 5 சதவீதத்தின் கீழ் கொண்டு வரப்படும். 28 சதவீத வரி விதிப்பில் உள்ள 90 சதவீத பொருட்கள் 18 சதவீத வரிவிதிப்புக்குள் கொண்டுவரப்படும். இதன் மூலம், பொருட்களின் விலை குறைந்து சாமானிய மக்களுக்கு நிதி சுமையிலிருந்து விடுதலை கிடைக்கும். இதுதவிர, 40 சதவீத சிறப்பு வரி விதிப்பும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதில், ஆன்லைன் விளையாட்டு, பான்மசாலா, புகையிலை உட்பட 5 முதல் 7 பொருட்கள் மட்டுமே இடம்பெற உள்ளது.
2 அடுக்குகளாக ஜிஎஸ்டி மாற்றப்படுவது குறித்து ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்துக்கான அமைச்சர்கள் குழுவின் பரிசீலனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிஹார் மாநில துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான ஆறு உறுப்பினர்கள் அடங்கிய இக்குழுவில் பல்வேறு மாநிலங்களின் முக்கிய அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த மாநில அமைச்சர்கள் குழு கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. இதில், 2 அடுக்குகளாக ஜிஎஸ்டி மாற்றப்படுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இந்த அமைச்சர்கள் குழுவில் மத்திய நிதி அமைச்சருக்கு எந்த பொறுப்பும் இல்லை. அவர் உறுப்பினரும் இல்லை. இருப்பினும், வரி சீர்திருத்தத்தின் பின்னணி மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைப்பதற்காக இந்த கூட்டத்தில் பங்கேற்று நிர்மலா சீதாராமன் முக்கிய உரையாற்ற உள்ளார்.
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி சீர்திருத்த முன்மொழிவை மாநில அமைச்சர்கள் குழு ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் அடுத்த மாதம் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அதுகுறித்து பரிசீலிக்கும். ஜிஎஸ்டி கவுன்சிலும் ஒப்புதல் தரும்பட்சத்தில் 2-அடுக்கு ஜிஎஸ்டி வரிமுறை நாடு முழுவதும் அமலுக்கு வரும். இதன் மூலம், தீபாவளிக்கு முன்னதாகவே பல்வேறு பொருட்களின் விலை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.