நொய்டா: சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்கள் மேலும் தொடரும் என்று பிரதமர் மோடி நேற்று தெரிவித்துள்ளார். கிரேட்டர் நொய்டாவில் உத்தர பிரதேச சர்வதேச வர்த்தக கண்காட்சி 2025-ஐ நேற்று தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: மக்களின் சுமையை குறைக்கும் விதமாக மத்திய அரசு வரிகளை கணிசமாக குறைத்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தியுள்ளது. இதனால், மக்களின் வருமானம் மற்றும் சேமிப்பு இரண்டும் அதிகரித்துள்ளது.
ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிப்பதன் மூலமும், புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை செயல்படுத்தியதன் மூலமும் மக்கள் இந்த ஆண்டு மட்டும் ரூ.2.5 லட்சம் கோடியை சேமிக்க வழி ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, கடந்த 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டியை அமல்படுத்தியதன் மூலம் மறைமுக வரி விதிப்பில் சீர்திருத்தங்களை அரசு அறிமுகப்படுத்தியது.
இது, பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படிநிலையாகும். அதைத் தொடர்ந்து இந்த செப்டம்பரில் மேலும் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. குடிமக்களின் ஆசீர்வாதத்துடன் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தொடரும். பொருளாதாரம் மேலும் வலுப்பெறும்போது குடிமக்கள் மீதான வரிச்சுமை இன்னும் கணிசமாக குறையும்.
ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவரும் அதிக சேமிப்புகளால் (ஐடி சலுகைகள் மற்றும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் காரணமாக) பயனடைந்துள்ளனர். இருந்த போதிலும், சில அரசியல் கட்சிகள் மக்களை குழப்ப முயற்சிக்கின்றன. 2014-க்கு முந்தைய தங்களின் தோல்விகளை மறைக்க காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மக்களிடம் பொய் சொல்கின்றன.
உண்மை என்னவென்றால், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது ‘வரி கொள்ளை’ நடந்தது. நாட்டின் சாதாரண குடிமக்கள் அதிக வரிகளால் பாதிக்கப்பட்டனர். எங்களின் அரசு வரிச்சுமையை பெருமளவில் குறைத்து பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறும் இலக்கை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.
சர்வதேச அளவிலான சவால்களுக்கு மத்தியில் வரும் தசாப்தங்களுக்கு தேவையான ஒரு வலுவான அடித்தளத்தை இந்தியா அமைத்து வருகிறது. உலகில் ஒரு நாடு மற்றவர்களை எவ்வளவு அதிகமாக சார்ந்து இருக்கிறதோ அவ்வளவு அதிகமாக அதன் வளர்ச்சி சமரசம் செய்யப்படுகிறது. இதனை உணர்ந்தே தற்சார்பு திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு இந்தியரும் தற்போது சுதேசியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். மக்களும், வியாபாரிகளும் உள்ளூர் பொருட்களை வாங்க, விற்க விரும்புகின்றனர்.
ரஷ்யாவுடன் ஒத்துழைப்பு: எனது தலைமையிலான ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவுடனான கூட்டாண்மையை இந்தியா மேலும் வலுப்படுத்தி வருகிறது. ஏகே-203 ரைபிள்கள் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பதில் ரஷ்யாவுடனான ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது. இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.
பெண்களுக்கு ரூ.10,000: விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள பிஹார் மாநிலத்தில் ‘முக்கியமந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா’ திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதன் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள 75 லட்சம் பெண்களின் வங்கி கணக்குகளில் தலா ரூ.10,000 செலுத்தப்பட உள்ளது.
இதற்காக மொத்தம் ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் பெண்களை ‘ஆத்மநிர்பார்’ (சுயசார்பு) ஆக்குவதையும், சுயதொழில் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகள் மூலம் அதிகாரமளிப்பதை ஊக்குவிப்பதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.