புதுடெல்லி: வரும் தீபாவளி, இரட்டை தீபாவளியாக மாறும். ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும். இதன்மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக குறையும் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நேற்று 79-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது: 1947-ம் ஆண்டு நமது நாடு சுதந்திரம் அடைந்தது. தேசத் தந்தை மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த 75 ஆண்டுகளாக நம்மை அரசியலமைப்பு சட்டம் வழிநடத்தி வருகிறது.
இதை உருவாக்க ராஜேந்திர பிரசாத், அம்பேத்கர், நேரு, சர்தார் வல்லபபாய் படேல், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஹன்சா மேத்தா, தாட்சாயணி வேலாயுதன் உள்ளிட்டோர் மிக முக்கிய பங்கு வகித்தனர். அவர்களுக்கு தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம்: சிந்து நதி நீர் ஒப்பந்தம் அநீதியானது, ஒருதலைப்பட்சமானது. இந்தியாவில் உற்பத்தியாகும் நதிகளின் நீர், எதிரியின் வயல்களுக்கு பாய்ந்தது. கடந்த 70 ஆண்டுகளாக இந்திய விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்தனர். இனிமேல் இந்தியாவுக்கு சொந்தமான நீர், இந்திய விவசாயிகளுக்கு மட்டுமே பயன்படும். விவசாயிகள், தேசத்தின் நலனுக்கு எதிரான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம். ரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாயக்கூடாது.
இரட்டை தீபாவளி: இந்திய மக்களின் வியர்வையால் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் வணிகர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். வரும் தீபாவளி பண்டிகையை, இரட்டை தீபாவளியாக மாற்றப் போகிறேன்.
இந்த தீபாவளியில் உங்களுக்கு மிகப்பெரிய பரிசு கிடைக்கப் போகிறது. கடந்த 8 ஆண்டுகளில் ஜிஎஸ்டியில் பெரிய சீர்திருத்தங்களை செய்துள்ளோம், நாடு முழுவதும் வரிச்சுமையைக் குறைத்து உள்ளோம், வரி முறையை எளிமைப்படுத்தி உள்ளோம், 8 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த மதிப்பாய்வை ஒரு முறை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். இதற்காக, உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தியது. மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டறிந்தது. இதன்படி வரும் தீபாவளி பண்டிகையின்போது சாமானிய மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் வரிகள் கணிசமாகக் குறைக்கப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், சிறு தொழில்முனைவோரும் பெரிதும் பலன் அடைவார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக குறையும். இது பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும்.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் தற்போது 5-வது இடத்தில் உள்ளோம். விரைவில் 3-வது இடத்தை எட்டிப் பிடிப்போம். உலக பொருளாதாரத்தில் மந்தமான சூழல் காணப்படுகிறது. எனினும் இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக இருக்கிறது. பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது. உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக நமது நாடு விளங்குகிறது.
நமது அந்நிய செலாவணி கையிருப்பு மிகவும் வலுவாக உள்ளது. உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தை பாராட்டி வருகின்றன. வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் நன்மைகள் ஏழைகள், விவசாயிகள், பெண்கள், நடுத்தர வர்க்கத்தினரை சென்றடைய புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
மத்திய நிதியமைச்சக வட்டா ரங்கள் கூறும்போது, “தற்போது 5%, 12%, 18%, 28% என்ற 4 பிரிவுகளில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதன்படி 5, 18 ஆகிய இரு பிரிவுகளில் மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். இதன்படி ஜிஎஸ்டி அதிகபட்ச வரி 18 சதவீதமாகக் குறையும். எனினும் சில ஆடம்பர பொருட்களுக்கு 40% வரி விதிக்கப்படும்’’ என்று தெரிவித்தன.