புதுடெல்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் இணை நிறுவனருமான ஷிபு சோரன், டெல்லி மருத்துவமனையில் இன்று (ஆக.4) காலமானார். அவருக்கு வயது 81.
இதுகுறித்து ஷிபு சோரனின் மகனும், ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமன் சோரன் வெளியிட்ட பதிவில், “மதிப்பிற்குரிய குரு நம் அனைவரையும் விட்டுச் சென்றுவிட்டார். இன்று, எனக்கு பெரிய வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது.” என்று தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், 38 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கட்சியின் தலைவராக இருப்பவருமான ஷிபு சோரன், 3 முறை ஜார்க்கண்ட் மாநில முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரது மகன் ஹேமந்த் சோரன் தற்போது ஜார்க்கண்ட் முதல்வராக உள்ளார்.
ஜார்க்கண்ட் பழங்குடி அரசியலின் முகமாக அறியப்படும் ஷிபு சோரன், சிறுநீரக பாதிப்பு காரணமாக கடந்த சில வருடங்களாக அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தார். 81 வயதாகும் அவருக்கு உடல்நிலை மேலும் மோசமானதை அடுத்து, ஜூன் மாத கடைசி வாரத்தில் டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து கடந்த சில நாட்களாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. சமீபத்திய ஆண்டுகளில் தீவிர அரசியலில் இருந்து ஷிபு சோரன் விலகி இருந்தது நினைவுகூரத்தக்கது.