புதுடெல்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் கவலைக்கிடமான நிலையில், வென்டிலேட்டர் உதவியுடன் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், 38 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கட்சியின் தலைவராக இருப்பவருமான ஷிபு சோரன், ஜார்க்கண்ட் மாநில முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரது மகன் ஹேமந்த் சோரன் தற்போது ஜார்க்கண்ட் முதல்வராக உள்ளார்.
ஜார்க்கண்ட் பழங்குடி அரசியலின் முகமாக அறியப்படும் ஷிபு சோரன், சிறுநீரக பாதிப்பு காரணமாக கடந்த சில வருடங்களாக அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. 81 வயதாகும் அவருக்கு உடல்நிலை மேலும் மோசமானதை அடுத்து, டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து தற்போது அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஜூன் 24ம் தேதி டெல்லி ஸ்ரீகங்கா ராம் மருத்துவமனையில் ஷிபு சோரனை சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்த முதல்வர் ஹேமந்த் சோரன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “எனது தந்தை சமீபத்தில் இங்கு அனுமதிக்கப்பட்டார். அவரைப் பார்க்க நாங்கள் வந்தோம். அவரது உடல்நிலை தொடர்பாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என தெரிவித்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷிபு சோரனின் உடல்நிலை குறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் நேரில் விசாரித்தனர்.
இதனிடையே, ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, தற்போது டெல்லி கொண்டு செல்லப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.